‘யு–டியூப்’ மூலமாக வீடியோ பதிவிட்டு திருமண தகவல் மையம் தொடங்குவதாக பல லட்சம் ரூபாய் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் ஈரோட்டில் போராட்டம்


‘யு–டியூப்’ மூலமாக வீடியோ பதிவிட்டு திருமண தகவல் மையம் தொடங்குவதாக பல லட்சம் ரூபாய் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் ஈரோட்டில் போராட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2018 5:00 AM IST (Updated: 26 Nov 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

‘யு–டியூப்’ மூலமாக வீடியோ பதிவிட்டு திருமண தகவல் மையம் தொடங்குவதாக பல லட்சம் ரூபாய் மோசடி நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

கோவையை சேர்ந்தவர் ஸ்டார் ஆனந்தராமன். இவர் ஆன்மிகம் தொடர்பான பதிவுகளை சமூக வலைதளமான ‘யு–டியூப்பில்’ பதிவிட்டு வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண தகவல் மையம் ஒன்று தொடங்க இருப்பதாவும், அதில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கொடுப்பதாகவும் ஒரு வீடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்டார் ஆனந்தராமன் ஈரோட்டிற்கு வந்தார். அவர் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த தகவல் தெரிந்ததும் பொதுமக்கள் சிலர் நேற்று காலை அங்கு வந்தனர். அவர்கள் ஸ்டார் ஆனந்தராமனை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:–

நாங்கள் வேலூர், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். ‘யு–டியூப்பில்’ ஸ்டார் ஆனந்தராமன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் திருமண தகவல் மையம் ஒன்று தொடங்க இருப்பதாகவும், அதற்கு முதலீடு செய்தால் 5 விதமான தொழில்கள் கொடுப்பதாகவும், அதில் இருந்து கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கொடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார். அதை நம்பிய நாங்கள் ரூ.1½ லட்சம், ரூ.2 லட்சம், ரூ.6 லட்சம் என ஏராளமானவர்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். அதன்பின்னர் அவரிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. நாங்கள் செல்போனில் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே ஈரோட்டில் இருப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் இங்கு விரைந்து வந்தோம். எங்களுடைய பணத்தை அவர் திருப்பி தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதன்பின்னர் ஸ்டார் ஆனந்தராமனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘‘என்னிடம் பணத்தை கொடுத்தவர்களுக்கு அதற்கான காசோலையை வழங்கி விடுகிறேன். அதுபோல் அவர்களிடம் நான் கொடுத்த பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்’’, என்று கூறினார். அதற்கு பாதிக்கப்பட்டவர்களும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story