ராமேசுவரத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்


ராமேசுவரத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:30 PM GMT (Updated: 25 Nov 2018 7:19 PM GMT)

ராமேசுவரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் மணிகண்டன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், சுனாமி குடியிருப்பு, பாம்பன் சின்னப்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் ஏராளமான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை வெள்ளத்தை அகற்றும் பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமேசுவரம் பகுதியில் கனமழையால் தாழ்வான பகுதிகளான நடராஜபுரம், மீனவர் காலனி, ராமகிருஷ்ணபுரம், தெற்கு கரையூர், மாந்தோப்பு, இந்திரா நகர், அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளில் அதிகமாக மழைநீர் தேங்கிஉள்ளது. இதேபோல பாம்பன் அருகே சின்னபாலம், தோப்புகாடு, தரவைதோப்பு ஆகிய பகுதிகளும், தங்கச்சிமடம் அருகே குடியிருப்பு பகுதிகளில் அதிக மழைநீர் தேங்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாக தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஊரகம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். எந்திரங்கள் மூலம் தற்காலிக வடிகால் அமைக்கப்பட்டு மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மழைநீர் வடிந்துள்ளது.

அவசரகால சூழ்நிலை கருதி ராமேசுவரம் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்கள் அனைத்தும் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மழைநீர் வடிந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கொசு புகை மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகளையும், பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. இதுதவிர இந்த பகுதியில் உள்ள மக்கள் விடுத்த கோரிக்கையின்படி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் டேங்கர் லாரிகள் மூலமாக குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், தாசில்தார்கள் சந்திரன், அப்துல் ஜப்பார், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story