மத்திய அரசின் திட்டங்கள் மூலம் புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் பேட்டி


மத்திய அரசின் திட்டங்கள் மூலம் புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2018 4:45 AM IST (Updated: 26 Nov 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டங்கள் மூலம் புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று ஈரோட்டில் அர்ஜூன் சம்பத் கூறினார்.

ஈரோடு,

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில், 108 நாட்களுக்கு ஆன்மிக அரசியல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வரவேண்டும். மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களான பீமா பசல் யோஜனா, மோடி கேர், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர்கள் பார்வையிடாதது வருத்தம் அளிக்கிறது.

நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசை எதிர்த்து விமர்சனம் செய்து விளம்பரம் தேடி கொள்கிறார். அவர் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். தேசவிரோத சக்திகளிடம் தான் கமல்ஹாசன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் முதல்–அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதியை விட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக ஆட்சி செய்கிறார்கள்.

கேரளா முதல்–மந்திரி பினராயி விஜயன், சபரிமலை அய்யப்பன் கோவிலை அழிக்க வேண்டும், அதனை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனையே போலீசார் வழி மறித்துள்ளனர் என்றால், சாதாரண பக்தர்களுக்கு என்ன நிலை இருக்கும். மனித குலத்தின் விரோதிகளாக உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளை இந்தியாவில் ஒழிக்க வேண்டும்.

சபரிமலையில் சாதாரண பக்தர்கள் சரண கோ‌ஷம் போட்டால் கைது செய்யப்படுகிறார்கள். மத்திய அரசு இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க கூடாது. மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து, சபரிமலையை நிர்வகிக்க வேண்டும்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.


Next Story