புயலால் பாதித்த மக்களுக்கு உதவிய புதுமண தம்பதி மணக்கோலத்தில் வந்து நிவாரண பொருட்களை வழங்கினர்


புயலால் பாதித்த மக்களுக்கு உதவிய புதுமண தம்பதி மணக்கோலத்தில் வந்து நிவாரண பொருட்களை வழங்கினர்
x
தினத்தந்தி 26 Nov 2018 4:30 AM IST (Updated: 26 Nov 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

புயலால் பாதித்த மக்களுக்கு புதுமண தம்பதி மணக்கோலத்தில் வந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.

கரூர், 

தமிழகத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியதில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பேரழிவை சந்தித்தன. இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

புயல் தாக்குதலால் குடிசைகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. லட்சக்கணக்கான தென்னை மரங்கள், பழமை வாய்ந்த மா, பலா, தேக்கு மரங்கள், புளிய மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்து விட்டன. இதையடுத்து புயல் பாதித்த பொதுமக்களுக்கு தமிழக அரசு, நடிகர், நடிகைகள் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கரூர் பசுபதீஸ்வரா அய்யப்ப சேவா சங்க கட்டிடத்தில், அரிமா சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் நிவாரண பொருட்களை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கரூரில் நேற்று திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியான செந்தில்-இந்துமதி ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்களும் உதவ வேண்டும் என நினைத்தனர். இதையடுத்து திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதியினர் மணக்கோலத்தில் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நிவாரண பொருட்கள் சேகரிக்கும் கரூர் பசுபதீஸ்வரா அய்யப்ப சேவா சங்க கட்டிடத்துக்கு வந்தனர். அங்கு மணமக்கள் இருவரும் சொந்த செலவில் வாங்கி வந்த போர்வை, துண்டுகள், சேலைகள் ஆகிய நிவாரண பொருட்களை அங்கிருந்தவர்களிடம் வழங்கினர். திருமணம் செய்து கொண்ட தம்பதி மணக்கோலத்தில் வந்து நிவாரண பொருட்களை வழங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Next Story