கஜா புயல் நிவாரணத்துக்கு கரம் கொடுத்த பள்ளி குழந்தைகள் வீடு, வீடாக சென்று உண்டியல்களில் நிதி சேகரித்தனர்
உடுமலை அருகே கஜா புயல் நிவாரணத்துக்காக வீடு, வீடாக சென்று பள்ளி குழந்தைகள் நிவாரண நிதி சேகரித்தனர்.
உடுமலை,
கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து கொண்டது. கஜா புயலுக்கு 63 பேர் பலியாகி இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. தீயணைப்பு படையினரும், மின்சார ஊழியர்களும் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர். புயல் பாதித்த பகுதிகளில் 590 நிரந்தர மருத்துவ முகாம்களும், 2 ஆயிரத்து 616 நடமாடும் மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். இதன்மூலம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 603 பேர் பயன் அடைந்துள்ளனர்.
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் என நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அரசியல் கட்சியினரும் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்று நேரில் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் உடுமலையை அடுத்த மலையாண்டிபட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகள் 10–க்கும் மேற்பட்டோர் கைகளில் உண்டியல்களை ஏந்தி, கஜா புயல் நிவாரணத்துக்காக தங்கள் கிராமத்தில் வீடு, வீடாக சென்று பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். உறவுகள், உடைமைகளை இழந்து நிர்கதியாக நிற்கும் டெல்டா மாவட்ட மக்களின் கண்ணீரை துடைக்கும் விதமாக மாணவ–மாணவிகள் நிவாரண நிதி சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டது கிராம மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. கிராம மக்களும் தங்கள் முடிந்த நிதிகளை வழங்கினார்கள்.
பிறரின் துயரையும் தன் துயரை போல் கருதி அதை துடைப்பதற்கு மனம் வேண்டும். டெல்டா மாவட்ட மக்கள் படும் துயரத்தை பத்திரிகைகளிலும், டி.வி. செய்திகளிலும் பார்த்த பள்ளி மாணவர்கள் தாங்களும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உண்டியல்களை ஏந்தி வீடு, வீடாக சென்று பணம் மட்டும் அல்லாமல், நிவாரண பொருட்களான அரிசி, பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் சேகரித்தனர். கஜா புயல் நிவாரணத்துக்காக கரம் கொடுத்த பள்ளி மாணவ–மாணவிகளை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மொத்தம் 2 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கமும், 65 கிலோ அரிசியையும், 4 பெட்டிகளில் பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் பள்ளி குழந்தைகள் சேகரித்தனர். பின்னர் இவற்றை அங்குள்ள வீரத்தமிழன் சிலம்பாட்ட குழுவினரிடம் ஒப்படைத்தனர். இந்த குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தனர்.