சின்ன வெங்காயம் சாகுபடி பணி தீவிரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டாரம் செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், நக்கசேலம், காரை, பெரம்பலூர் வட்டாரம் அம்மாபாளையம், லாடபுரம், மேலப்புலியூர், எளம்பலூர், குரும்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரம் அரசலூர், தொண்டமாந்துறை, மலையாளப்பட்டி, வேப்பூர் வட்டாரத்தில் சிலபகுதிகளில் கோ-4 ரக சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சின்னவெங்காயம் மொத்த உற்பத்தியில் வைகாசி பட்டத்தில் 40 சதவீதமும், புரட்டாசி பட்டத்தில் 60 சதவீதமும் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை சராசரியாக 8 ஆயிரம் எக்டேர் முதல் 8900 எக்டேர் வரை சாகுபடி செய்யப்பட்டது. கடந்த (2017-18) நிதிஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் சின்னவெங்காயம் சாகுபடி பரப்பு 7 ஆயிரத்து 114 எக்டேராக குறைந்தது. நடப்பு ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. கடந்த 23-ந் தேதி ஒரு நாள் மட்டுமே மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. சில இடங்களில் வயல்களில் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வயல்களிலேயே பட்டரை போட்டு வெங்காயத்தை சேமித்துள்ளனர். அறுவடை செய்துள்ள வயல்களில் மீண்டும் சின்ன வெங்காயம் விதைக்கும் களப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் பட்சத்தில் சின்ன வெங்காய உற்பத்தி மேலும் பலநூறு எக்டேர் சாகுபடி பரப்பிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வெங்காய வயல்களில் அறுவடை செய்து சேமித்த வெங்காயத்தை தேவைக்கு ஏற்ப அவ்வப்போது அதன் சருகுகளை ஆய்ந்து வெளிச்சந்தைக்கு அனுப்பிவருகின்றனர். சில்லரை விலையில் சற்று காய்ந்த நிலையிலான வெங்காயம் ஒரு கிலோ ரூ.16 முதல் ரூ.20 வரை தரத்திற்கேற்ப விற்பனை ஆகிறது. முதல்தர வெங்காயம் ரூ.30 முதல் ரூ.35 விரை விற்பனை செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடியாகும் சின்ன வெங்காயம் திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய மார்க்கெட்டுகளுக்கும், செட்டிக்குளம் வெங்காய மார்க்கெட்டிற்கும் மொத்தவிலை விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த வெங்காயத்தை பிறமாவட்டங்களை சேர்ந்த தனியார் மொத்த கொள்முதல் மண்டிக்கு அனுப்பி உடனுக்குடன் பணம் பெறுவதிலேயே அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story