புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் மத்தியக்குழு ஆய்வுக்கு செல்ல முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் மத்தியக்குழு ஆய்வுக்கு செல்ல முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2018 10:45 PM GMT (Updated: 25 Nov 2018 7:53 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமத்திற்கும் மத்தியக்குழு ஆய்வுக்கு செல்ல முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயல் பாதித்த மீனவர்களை சந்திப்பதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி நிதி கோரி உள்ளது. தமிழக அரசுக்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த காலங்களில் பின்பற்றியதை மத்திய அரசு பின்பற்றாது என எண்ணுகிறோம். பாதிக்கப்பட்ட இடங்களில் மத்தியக்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டு உள்ளன. அனைத்து கிராமத்திற்கும் மத்தியக்குழு ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்றால் அது முடியாத காரியம். பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழு அதிகமாக ஆய்வு செய்து, விரைவில் ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தால் தான் தமிழகத்திற்கு நிதி கிடைக்கும்.

விவசாய கடன் தள்ளுபடி என்பது கொள்கை முடிவு. இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் முடிவு செய்வார். எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை கதையில் காட்ட கூடாது. அவர்கள் அரசியல் பேச வேண்டும் என்றால் மேடை போட்டு பொதுக்கூட்டத்தில் பேசட்டும். தமிழக அமைச்சர்கள் மக்களோடு மக்களாக உள்ளனர். மக்களை அமைச்சர்கள் சந்திக்கவில்லை என விமர்சிப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போன்று பேசக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மீனவர்கள் உயிரை காப்பாற்றி உள்ளோம். மீனவர்களின் படகு சேதமடைந்து உள்ளது. சேதமடைந்த படகுகளுக்கு மீனவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் கடலோர பகுதிகளிலுள்ள படகுகள் சேதமடைந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கடலோர பகுதிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நேற்று கட்டுமாவடி பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் புதுக்குடி மீனவ கிராமத்திற்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடிதளத்திற்கு வந்து சேதமடைந்த படகுகளை ஆய்வு செய்தார். பின்னர் மீனவ சங்க நிர்வாகிகளிடம் புயல் சேதம் குறித்து கேட்டறிந்து, சேதமடைந்த விசை படகுகளுக்கும், நாட்டுபடகுகளுக்கும் தமிழக அரசு மூலம் விரைவாக நிவாரண வழங்கப்படும் என்று கூறினார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கணேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story