புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் - திருநாவுக்கரசர் தகவல்


புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் - திருநாவுக்கரசர் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:45 PM GMT (Updated: 25 Nov 2018 7:58 PM GMT)

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் முதல்–அமைச்சர் நாராயணசாமியை நேற்று அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். அப்போது நாராயணசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அரசின் நிவாரண பொருட்களும், நிவாரண பணிகளும் இதுவரை சென்றடையவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் முழுமையாக பார்வையிடவில்லை.

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கவேண்டும். புயல் பாதிப்புகளை ஒன்றாக சென்று பார்வையிட்ட முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா? கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருவார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். பாரதீய ஜனதா மற்றும் மோடியை எதிர்ப்பவர்களும், காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி தலைமையை ஏற்பவர்களும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். இதுவரை நட்பு ரீதியில்தான் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளனர்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.


Next Story