பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு கேள்விக்குறியாக்கிவிட்டது - மாணிக்கம் தாகூர் பேட்டி


பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு கேள்விக்குறியாக்கிவிட்டது - மாணிக்கம் தாகூர் பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2018 4:30 AM IST (Updated: 26 Nov 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தை முன்னேறதுடிக்கும் மாவட்டம் என அறிவித்துவிட்டு இம்மாவட்டத்திலுள்ள 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு கேள்விக்குறியாக்கிவிட்டது என அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் குற்றம் சாட்டினார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தை முன்னேற துடிக்கும் மாவட்டம் என அறிவித்த மத்திய அரசு இம்மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திட்டப்பணிகளை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாமல் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கண்துடைப்பு ஆய்வுக்கூட்டம் மட்டும் நடத்திவிட்டு செல்கிறார்.

மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்தை 3 ஆண்டுகளில் முன்னோடி மாவட்டமாக உருவாக்குவோம் என்பது வெற்று கோ‌ஷமாகவே தெரிகிறது. ஏனெனில் பட்டாசு தொழில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது உரிய முறையில் இத்தொழிலில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறாததால் பட்டாசு தொழில் பாதிப்படைந்து ஆலைகள் மூடும் நிலை ஏற்பட்டுவிட்டது. இம்மாவட்டத்தில் உள்ள 8 லட்சம் ஏழை பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு கேள்விக்குறியாக்கிவிட்டது.

பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 59 நிமிடங்களில் சிறு தொழிலுக்கு ரூ.1 கோடி வங்கிக்கடன் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த திட்டத்தின் முகவராக பிரதமர் மோடியின் நெருக்கமான தொழில் அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் இந்த வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்தால் 45 நிமிடங்களில் கொள்கை அளவில் உங்களுக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் உங்கள் பகுதியில் உள்ள குறிப்பிட்ட வங்கிக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த வங்கிகளுக்கு சென்றால் அதிகாரிகள் கடன் தர மறுக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் கடன் கேட்டு விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணம், இதற்காக நியமிக்கப்படுள்ள தொழில் நிறுவனத்திற்கு சேர்ந்துவிடுகிறது. இதுவும் சிறுதொழில் முனைவோரை ஏமாற்றும் செயலாகவே உள்ளது.

5 வடமாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சி தனது மதச்சார்பின்மையை விட்டுவிடவில்லை. பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கையை எதிர்த்துதான் பிரசாரம் செய்யப்பட்டது. கோசாலை என்று அமைக்கப்படும் என்ற அறிவிப்பை மதம் சார்ந்த அறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது. 5 மாநில சட்ட சபை தேர்தல் முடிவு பா.ஜ.க.விற்கு எதிராக அமையும் என்பது உறுதி.

வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணியை அமைக்கும். தற்போது காங்கிரஸ் கூட்டணி கட்சியில் உள்ள மாநில கட்சிகளுடன் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தொடரும். இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் குறைந்த பட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ளப்படும். ராகுல்காந்தியை பொறுத்தமட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு தேவையில்லை என்பதாகும்.

தேர்தல் முடிந்த பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கூடி ராகுல் காந்தியைத்தான் பாராளுமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 10 வருடங்களாக பா.ஜ.க.வுடன் இருந்த சந்திரபாபு நாயுடு தற்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். தமிழகத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் நீடிக்கும். 20 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்.

தமிழகத்திற்கான மேலிட காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை தனியாக சந்தித்ததில் எவ்வித ரகசியமும் இல்லை. மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார். மு.க. ஸ்டாலின் ராகுல் காந்தி இடையே நல்ல நட்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் தொகுதி உடன்பாடு செய்யப்படும். அப்போது விருதுநகர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்படும். இத்தொகுதியில் மேலிடம் வகிக்கும் பொறுப்பாளரை வெற்றி பெறச்செய்வோம்.

விருதுநகர் மாவட்டத்திற்கு வாக்குச்சாவடி குழுக்களை கண்காணிக்க நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி மோகன்குமார் ராஜா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இம்மாவட்டத்தில் உள்ள 7 சட்ட மன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 1,881 வாக்குச்சாவடி குழு நிர்வாகிகளை சந்தித்து பணிகளை முடுக்கிவிட நடவடிக்கை எடுப்பார். வாக்குச்சாவடி குழு நிர்வாகிகளுக்கு மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் தலைமையில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் பணியாற்றிய 45 ஊழியர்களையும் பணிக்கு செல்லாமல் தடுக்கும் நிலை உள்ளதால் அவர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலை உள்ளது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பணி நியமன உத்தரவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக மாநில ஆதிதிராவிடர் நலதுறையின் நடவடிக்கையும் தேவையாகும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண் உதவி வழங்க மத்திய அரசு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன்குமார் ராஜா, மதுரை காங்கிரஸ் நிர்வாகி முருகராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயகண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story