திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூரில்: மின்சாரம் வழங்க கோரி கிராமமக்கள் சாலைமறியல்
திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூரில் மின்சாரம் வழங்க கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த நிலையில் ஒரு சில இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி மடப்புரம் பகுதியில் உடனே மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இதேபோல கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி, பொதக்குடி, தோட்டச்சேரி, சேகரை ஆகிய இடங்களில் மின்சாரம் வழங்க வலியுறுத்தி நேற்று அந்தந்த கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் கூத்தாநல்லூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டு கலைந்து சென் றனர்.
Related Tags :
Next Story