மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அரசமரத்தில் கூட்டமாக வாழும் நாரைகள்


மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அரசமரத்தில் கூட்டமாக வாழும் நாரைகள்
x
தினத்தந்தி 26 Nov 2018 4:00 AM IST (Updated: 26 Nov 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அரசமரத்தில் கூட்டமாக வாழும் நாரைகள் எச்சம் போடுவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

குளித்தலை, 

குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பெரியபாலம் அருகே பழமை யான அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இங்கு பல்வேறு சுவாமிகளின் சன்னதி தனித்தனியாக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும், கடம்பவனேசுவரர் கோவில் நிர்வாகத்தின் கீழும் இக்கோவில் செயல்பட்டு வருகிறது. பொதுவாக சிவன் கோவில்களில் நடைபெறும் பூஜைகள், விழாக்கள் போன்று இக்கோவிலிலும் தினசரி பூஜைகள், மாதம் தோறும் பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன. இக்கோவிலில் பெரிய அரச மரம், தென்னை, வேப்பமரங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்குள்ள பெரிய அரசமரத்தில் நீர் காக்கை என அழைக்கப்படும் கருப்பு நிறம் கொண்ட நாரைகள் கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. அதிக அளவில் வசித்து வரும் இப்பறவைகளின் எச்சம் கோவில் முழுவதும் விழுந்து கிடக்கிறது.

தினசரி கோவிலுக்கு வருபவர்களும், சிறப்பு பூஜை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களும் கோவிலுக்கு வரும்போது, இப்பறவைகளின் எச்சம் பக்தர்களின் மேல் விழுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு பூஜைகள் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று தங்கள் உடைமைகளை மாற்றவேண்டிய நிலை உள்ளது. இதுபக்தர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அடர்ந்து காணப்படும் இம்மரத்தில் உள்ள பறவைகளின் எச்சம் கோவில் அருகே சாலையில் செல்பவர்களின் மீது விழுவதால் இச்சாலை வழியாக செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற தேவையான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவில் மரங்களில் உள்ள கிளைகளை கழித்து (வெட்டி) இம்மரங்களில் நாரைகள் தங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story