முழு அரசு மரியாதையுடன் நடிகர் அம்பரீஷ் உடல் இன்று அடக்கம் குமாரசாமி, ரஜினிகாந்த் அஞ்சலி
மறைந்த நடிகர் அம்பரீசின் உடல் அடக்கம் முழு அரசு மரியாதையுடன் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
பெங்களூரு,
மறைந்த நடிகர் அம்பரீசின் உடல் அடக்கம் முழு அரசு மரியாதையுடன் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. அவரது உடலுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கன்னட திரையுலகில் முடிசூடா மன்னராக நடிகர் அம்பரீஷ் திகழ்ந்தார்.
அம்பரீஷ் மரணம்
மறைந்த கன்னட ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர் ராஜ்குமாருக்கு அடுத்த இடத்தை அவர் பிடித்திருந்தார். நடிகர் சங்க தலைவராகவும் அம்பரீஷ் இருந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
முன்பு சித்தராமையா மந்திரிசபையில் மந்திரியாக இருந்தபோது, அவருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அவ்வப்போது, உடல்நலக்குறைவு ஏற்படுவதும், பின்னர் அவர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்புவதுமாக இருந்தார். இதனால் அவர் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அரசியலில் இருந்து அவர் ஒதுங்கியே இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு 66 வயது.
குமாரசாமி அஞ்சலி
அம்பரீஷ் மரணமடைந்த தகவல் கேட்டு நேற்று முன்தினம் இரவே மருத்துவமனை முன்பு அவரது ரசிகர்கள், ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். நள்ளிரவில் ஜே.பி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நடிகர் அம்பரீசின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கும் மந்திரிகள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் அம்பரீசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் அம்பரீசின் உடல் நேற்று காலை கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதல்-மந்திரி குமாரசாமி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அவரது மனைவி சென்னம்மா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, எஸ்.எம்.கிருஷ்ணா, பெங்களூரு நகர மேயர் கங்காம்பிகே, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், கர்நாடக பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா, மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், பிரியங்க் கார்கே, ஷோபா எம்.பி., கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் உள்பட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ரஜினிகாந்த், சரத்குமார்
அம்பரீசின் உடலுக்கு நேரில் வந்து நடிகர் ரஜினிகாந்த் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், அம்பரீசின் மனைவி சுமலதா, மகன் அபிஷேக் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். நடிகர்கள் சரத்குமார், சிரஞ்சீவி, மோகன்பாபு, பிரகாஷ்ராஜ், அர்ஜூன், சரத்பாபு, புனித் ராஜ்குமார், உபேந்திரா, யஷ், ரவிச்சந்திரன், சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், ரமேஷ் அரவிந்த், சுதீப், ரக்ஷித்ஷெட்டி, தேவராஜ், பிரஜ்வல் தேவராஜ், சாதுகோகிலா, நடிகைகள் ராதிகா, சுகாஷினி மணி ரத்னம், சஞ்சனா, சுருதி, பிரியங்கா, லட்சுமி, அம்பிகா, ஜெயந்தி, பாரதி விஷ்ணுவர்தன், மாலாஸ்ரீ, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட கன்னட திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் மந்திரிகள் காகோடு திம்மப்பா, ராமலிங்கரெட்டி, சிவராஜ் தங்கடகி ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து அம்பரீசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அம்பரீசின் மறைவுக்கு பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். கன்டீரவா விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சோகம் ததும்ப...
அம்பரீசின் உடல் அருகே அவரது மனைவியான நடிகை சுமலதா, மகன் அபிஷேக் அம்பரீஷ் ஆகியோர் முகத்தில் சோகம் ததும்ப அமர்ந்திருந்தனர். சுமலதா, கண்ணீர் வடித்தபடி இருந்தார். முதல்-மந்திரி குமாரசாமி அஞ்சலி செலுத்திய பிறகு அங்கேயே இருந்தார்.
பெங்களூருவில் கன்டீரவா ஸ்டூடியோவில் நடிகர் ராஜ்குமார் சமாதியின் அருகே அம்பரீசின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று குமாரசாமி அறிவித்தார். இதற்காக அங்குள்ள 1½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நிர்மலா சீதாராமன்
அம்பரீஷ், மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். அதனால் அவரை ‘மண்டியாத கன்டு’ (மண்டியாவின் ஆண்) என்று அன்புடன் அழைத்தனர். அஞ்சலி செலுத்த அம்பரீசின் உடலை மண்டியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த மாவட்ட மக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுடன் முதல்-மந்திரி குமாரசாமி தொலைபேசியில் பேசி, அம்பரீசின் உடலை மண்டியாவுக்கு எடுத்துச் செல்ல விமானப்படை ஹெலிகாப்டர் வழங்குமாறு கோரினார். இதற்கு அவர் அனுமதி வழங்கினார்.
மண்டியாவில் அஞ்சலி
இதையடுத்து, அம்பரீசின் உடல், நேற்று மாலை 4 மணியளவில் பெங்களூருவில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அம்பரீஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடன் சென்றனர். முதல்-மந்திரி குமாரசாமியும் ஹெலிகாப்டரில் மண்டியாவுக்கு சென்றார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கர்நாடக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக அம்பரீசின் உடல் வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானவர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று(திங்கட்கிழமை) காலை மீண்டும் பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்திற்கு அதே ஹெலிகாப்டரில் அம்பரீசின் உடல் எடுத்து வரப்படுகிறது. அங்கு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று உடல் அடக்கம்
காலை 10 மணியளவில் அம்பரீசின் உடல் ஊர்வலமாக கன்டீரவா ஸ்டூடியோவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
முன்னாள் மத்திய, மாநில மந்திரியான நடிகர் அம்பரீசின் மறைவையொட்டி கர்நாடக அரசு 3 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story