பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாபர்ஷெரீப் மரணம் முதல்-மந்திரி குமாரசாமி நேரில் அஞ்சலி
பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாபர்ஷெரீப் மரணம் அடைந்தார். முதல்-மந்திரி குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாபர்ஷெரீப் மரணம் அடைந்தார். முதல்-மந்திரி குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திடீரென மாரடைப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜாபர்ஷெரீப் (வயது85). முன்னாள் மத்திய மந்திரியான இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை பெங்களூரு கன்னிங்காம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பகல் 12.30 மணியளவில் மரணம் அடைந்தார். இந்த தகவலை அந்த தனியார் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
குமாரசாமி அஞ்சலி
இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜாபர்ஷொீப்பின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவரது உடல் கோல்ஸ் பார்க் அருகில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஜாபர்ஷெரீப் மறைவுக்கு இரங்கல் ெதரிவிக்கும் வகையில் கர்நாடக அரசு சார்பில் நேற்று முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாபர்ஷெரீப் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜாபர்ஷெரீப்பின் உடல் இன்று(திங்கட்கிழமை) முஸ்லிம் மத சடங்குகள்படி அடக்கம் செய்யப்படுகிறது.
ரெயில்வே மந்திரியாக...
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ஜாபர்ஷெரீப் மத்திய ரெயில்வே துறை மந்திரியாகவும், ராஜீவ்காந்தி மந்திரிசபையில் நிலக்கரித்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். அப்போது, கர்நாடகத்தில் குறுகிய ரெயில் பாதைகள், அகல பாதைகளாக மாற்றப்பட்டன. பல்வேறு ரெயில்வே திட்டங்களும் கர்நாடகத்தில் அமல்படுத்தப்பட்டன.
1933-ம் ஆண்டு சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரே என்ற பகுதியில் அவர் பிறந்தார். கடைசியாக அவர் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் அந்த தொகுதியில் 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்
1969-ம் ஆண்டு காங்கிரஸ் உடைந்தபோது, இந்திரா காந்திக்கு ஆதரவாக நின்றவர் ஜாபர்ஷெரீப். அவரது மனைவி கடந்த 2008-ம் ஆண்டு மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகன்களும் விபத்து ஒன்றில் ஏற்கனவே இறந்துவிட்டனர். தற்போது 2 மகள்கள் மட்டும் உள்ளனர்.
அரசியல், கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் ஜாபர்ஷெரீப் நல்லுறவை வைத்திருந்தார். ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைந்தபோது, புதிய ஜனாதிபதியாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை நியமிக்க வேண்டும் என்று ஜாபர் ஷெரீப் பிரதமருக்கு கடிதம் எழுதி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
Related Tags :
Next Story