வைகை அணையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் - கேள்விக்குறியாகும் பாதுகாப்பு


வைகை அணையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் - கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 10:15 PM GMT (Updated: 25 Nov 2018 10:37 PM GMT)

வைகை அணையில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் முறைகேடாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதால், அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

ஆண்டிப்பட்டி,-


ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வைகை அணையை பார்வையிட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். தற்போது அணையில் கணிசமாக நீர்இருப்பு உள்ளதால் அணையை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வைகை அணையில் பிரதான மதகுகள், நீர்தேக்கம், நீர்மின்நிலையம், சுரங்கம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அவை தடை செய்யப்பட்ட பகுதிகள் ஆகும்.

ஆனால் வைகை அணையில் பணிபுரியும் சில பணியாளர்கள் முறைகேடாக தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று மாலை வைகை அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வைகை அணையின் பிரதான மதகுகளை இயக்கும் மேல்பகுதியில் தடைசெய்யப்பட்ட பகுதியில் இரும்பு கதவு திறந்து கிடந்தது. இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட மதகு பகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் மதகு பகுதி, நீர்தேக்க பகுதிகளில் அபாயகரமான முறையில் நின்று, செல்பி எடுத்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து வந்த ஒரு பணியாளர் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் இருந்த சுற்றுலா பயணிகள் வெளியே வராதபடி கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் சுற்றுலா பயணிகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

இதையடுத்து கதவை திறக்கக்கோரி பணியாளர்களுடன் சிறிது நேரம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அந்த கதவு திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வெளியே வந்தனர்.

5 மாவட்ட மக்களுக்கு நீர்ஆதாரமாக விளங்கும் வைகை அணையில் தடைசெய்யப்பட்ட பகுதிகளை பார்வையிட பணியாளர்கள் சிலர் விதியை மீறி சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் போல சமூக விரோதிகளும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடும் அபாயமும் உள்ளது. எனவே கேள்விக்குறியாகும் வைகை அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையில், கூடுதல் பணியாளர்களை நியமித்து, இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரையும் அனுமதிக்காதவாறு பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணை பாதுகாப்பு குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மத்திய அணை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு நடத்தி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story