கஜா புயல் பாதித்த பகுதியில்: நிவாரண பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட வேண்டும் - கடலூரில் திருநாவுக்கரசர் பேட்டி
கஜா புயல் பாதித்த பகுதியில் நிவாரண பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கடலூரில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர்,
கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். தற்போது 3 நாட்கள் தங்கி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட இருக்கிறேன். வருகிற 8-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளுக்கு கணிசமாக உதவிகளை செய்ய இருக்கிறோம்.
இதற்கிடையில் புயல் பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்களை யாரையும் கட்டாயப்படுத்தாமல் வசூல் செய்து கட்சி நிர்வாகிகள் மூலம் வழங்கி வருகிறோம். தமிழக அரசு செய்து வரும் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. புயல் வருவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை பணிகள் நன்றாக இருந்தது.
ஆனால் புயல் பாதிப்புக்கு பிறகு நிவாரண பணிகள் மந்தமாக இருக்கிறது. சேதம் அடைந்த பகுதிகள் அதிகமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவுக்கு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. படகுகளும் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்து காணப்படுகிறது. பணப்பயிர்கள், மரங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் உணவு பொருட்கள் பற்றாக்குறை உள்ளது. பால், தண்ணீர் கூட சில இடங்களுக்கு சென்று சேர வில்லை. மீன்பிடி தொழிலை மட்டும் நம்பி உள்ள மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமடைந்து உள்ளதால், அவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் நிவாரண உதவி வழங்குவது போல். அவர்கள் தொழிலுக்கு செல்லும் வரை மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும்.
சேதமடைந்த படகுகள், தென்னை மரங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதாது. அதிக நிதி ஒதுக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளை இதுவரை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மத்திய மந்திரிகள் இது வரை பார்வையிட வரவில்லை. தற்போது தான் மத்திய குழு வந்துள்ளது. அவர்கள் பார்வையிட்டு, அறிக்கை கொடுத்த பிறகு தான் நிவாரணம் அறிவிப்பார்கள். இதற்கிடையில் மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு ஒதுக்கிய ரூ.1,000 கோடியும் போதாது. நிவாரண பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கீழே விழுந்த மரங்களை அப்புறப் படுத்துவதற்கு அரசு பணம் ஒதுக்க வேண்டும். நிவாரண பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் புயல் பாதித்த காலங்களில் காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராகுல்காந்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். ஆனால் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அவர்கள் என்ன? ஒட்டி பிறந்த இரட்டையர்களா? தனித்தனியாக சென்று பார்க்க மாட்டார்களா? தேவை ஏற்பட்டால் ராகுல்காந்தி புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிடுவார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேரை விடுதலை செய்ததே தவறு. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எப்படி தவித்து இருக்கும். அ.தி.மு.க. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என்றால் விடுதலை செய்யலாமா? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரையும் சட்டப்படி விடுதலை செய்ய முடியாது என்பதால் தான் கவர்னர் இது வரை அவர்களை விடவில்லை. ஆகவே ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தவறு. இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story