திருவாரூர் மாவட்டத்தில்: கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று மத்திய குழுவினர் பார்வையிட்டனர். காலையில் தஞ்சை மாவட்டத்திலும், மாலையில் திருவாரூர் மாவட்டத்திலும் ஆய்வு செய்தனர். இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்(நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 1 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள், பலியான கால்நடைகள் போன்றவை குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். பின்னர் அவர்களுக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து அதிகாரிகளுடன், மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து மதிய உணவுக்கு பின்னர் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை கிராமத்திற்கு மத்திய குழுவினர் சென்றனர். அங்கு நாகராஜூக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு நடந்த சென்ற மத்திய குழுவினர் அங்கு சாய்ந்து கிடந்த தென்னை மரங்களையும், மா மரங்களையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். பின்னர் அப்பகுதி விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
அப்போது விவசாயிகள், கஜா புயலால் நாங்கள், பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளோம். நகை மற்றும் இடத்தை அடமானம் வைத்து வங்கிக்கடன் பெற்று இருக்கிறோம். எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களை காப்பாற்றுங்கள், நாங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவ வேண்டும் என்று கூறினர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய குழுவினர், உங்களது கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தில்லைவிளாகம் வழியாக தொண்டியக்காடு கிராமத்திற்கு சென்றனர். அங்கு புயலால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது அவர்களிடம், தங்கள் வீடுகளை சீரமைத்து தர வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இதை கேட்டறிந்த மத்திய குழுவினர், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட மத்திய குழுவினர், கற்பகநாதர்குளம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு புயலால் பலியான கால்நடைகளின் உரிமையாளர்கள் 15 பேரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அந்த பகுதியில் சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுவதையும் பார்வையிட்டனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், இடும்பாவனம், உதயமார்த்தாண்டபுரம், எடையூர், பின்னத்தூர், அம்மளூர், வேப்பஞ்சேரி, தெற்கு பள்ளியமேடு, பாண்டி, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் சேதமடைந்த வீடுகளையும், சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களையும், நிவாரண பொருட்களுக்காக சாலையோரம் காத்து நின்ற மக்களையும் காரில் சென்றபடியே பார்வையிட்டனர்.
மத்திய குழுவினருடன் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், செல்லூர் கே.ராஜூ, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மணிவாசன், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சேத பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் நாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். நாகை மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் இன்று(திங்கட்கிழமை) பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.
Related Tags :
Next Story