டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில்


டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
x
தினத்தந்தி 26 Nov 2018 5:27 AM IST (Updated: 26 Nov 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? என்று நிருபர் கேட்ட கேள்விக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

நாகர்கோவில்,

பிரதமர் நரேந்திரமோடி மாதந்தோறும் நாட்டு மக்களிடம் வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். ‘மன் கீ பாத்‘ (மனதின் குரல்) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் 50-வது நிகழ்ச்சி நாடு முழுவதும் நேற்று ஒலிபரப்பப்பட்டது.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்திருந்தனர். பிரதமர் நரேந்திரமோடி பேசியதை அனைத்து மக்களும் கேட்கும் விதமாக அங்கு பெரிய ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பவன்குமார் கிரியப்பன்னவர், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நிர்வாகிகள் கணேசன், தர்மராஜ், தர்மலிங்கஉடையார், தேவ், மீனாதேவ், ராஜன், அஜித் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதை ஒருவர் தமிழில் விளக்கி கூறினர். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014-ம் ஆண்டு முதல் வானொலியில் பேசி வருகிறார். இதற்காகவே தனியாக தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து வரும் லட்சக்கணக்கான கடிதங்களில், அதிகமாக இடம்பெற்றிருக்கும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கிறார்.

இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் பிரதமர் நரேந்திரமோடி தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி பேசுவதை 66 சதவீதம் மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு நிருபர், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் கஜா புயல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. புயல் பாதிப்புக்கு தமிழக அரசு சார்பில் 16 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் புயல் சேதத்தை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் முழுமையாக ஆய்வு நடத்திய பிறகுதான் புயலின் தாக்கம் முழுமையாக கண்டுபிடிக்கப்படும். பின்னர்தான் தேசிய பேரிடரா? என்பது பற்றியும் தெரியவரும். புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நான் சந்தித்தேன். அப்போது ஒரு முகாமில் சிலர் நிவாரண பொருட்கள் கிடைத்ததாக கூறுகிறார்கள். அதே சமயத்தில் வேறு சிலர் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்கிறார்கள்‘ என்றார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- குழந்தை கடத்தல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களில் மாபியா கும்பல் ஈடுபடுவதாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த்துக்கு இப்போது தான் அதுபற்றி முழுமையாக தெரியவந்துள்ளது. மாபியா கும்பலை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழகத்தின் வரி வருவாய் குறைந்துவிட்டதாக தம்பிதுரை எம்.பி. கூறியிருக்கிறார். ஆனால் கடந்த காலத்தைவிட தற்போது வரி வருவாய் அதிகரித்து இருக்கிறது.

சபரிமலைக்கு சென்ற என்னை போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தியதில் எந்த தவறும் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அவ்வாறு கூறவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். இதுதொடர்பாக வழக்கு வந்தால் வரட்டும். சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா மட்டும் தான் போராட்டம் நடத்துவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது அவருக்கு தெரியவில்லையா?

பார்வதிபுரம் மேம்பாலம் அடுத்த மாதம் 15-ந் தேதி மக்களின் பார்வைக்காக திறக்கப்படும். அதன்பிறகு வாகனங்களை ஏற்றி சோதனை பார்த்த பிறகு பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளிக்கு இயக்கக் கூடாது என்பது குறித்து ரெயில்வே மந்திரிக்கு நான் கடிதம் அனுப்பி உள்ளேன். இரட்டை ரெயில் பாதை, மின்மயம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே அதுமுடிந்ததும் குமரி மாவட்டத்தை மதுரை ரெயில்வே கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பாறை, மணல் எடுத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story