வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் 160 ஆசிரியர்கள் கைது


வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் 160 ஆசிரியர்கள் கைது
x
தினத்தந்தி 27 Nov 2018 4:30 AM IST (Updated: 26 Nov 2018 7:10 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 160 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசாணை 303–ன் நகல் எரிப்பு பேராட்டம் நேற்று நடந்தது. அதன்படி வேலூரில் கலெக்டர் அலுவலகம் அருகே இந்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டக்கிளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை 9 மணி முதல் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆசிரியர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதையொட்டி அங்கு இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, நாகராஜன் ஆகியோர் தலைமையில் 30–க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 11 மணியளவில் அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் அமர்நாத், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஞானசேகரன், உமா, ரஞ்சன்தயாளதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார்கள்.

தொடர்ந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரியும், அரசாணை 303–ஐ ரத்து செய்யக்கோரியும் ஆசிரியர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள், அரசாணை 303–ன் நகலை தீ வைத்து எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீ வைக்கப்பட்ட அரசாணை நகல்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்து வேனில் ஏற்றி, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 160 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story