வேலூர் அப்துல்லாபுரம் விமானநிலைய சீரமைப்பு பணிகள் தீவிரம்


வேலூர் அப்துல்லாபுரம் விமானநிலைய சீரமைப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 Nov 2018 3:45 AM IST (Updated: 26 Nov 2018 9:16 PM IST)
t-max-icont-min-icon

அப்துல்லாபுரம் விமான நிலைய சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓடுதளம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

வேலூர்,

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் செயல்படாமல் இருந்த விமான நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்ததும் சென்னையில் இருந்து வேலூர் வழியாக பெங்களூருவுக்கு சிறிய ரக விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இங்கு ஏற்கனவே இருந்த விமான ஓடுதளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. தற்போது ஓடுதளத்தின் உயரத்தை அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஓடுதளத்தின் உயரத்தை அதிகரித்து அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓடுதளத்தின் நடுவே தண்ணீர் செல்லும் சிறிய ஓடைபோன்ற பகுதி வருகிறது. அந்த பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகள் உயர்த்தப்பட்டு விட்டன.

விமான நிலைய வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டாமல் அப்புறப்படுத்தி வேறு பகுதிகளில் வைக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், கர்நாடக மாநில வனத்துறை உதவியை நாடி உள்ளனர்.

இந்த நிலையில் அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் ‘சிக்னல் டவர்’ அமைப்பதற்கான பொருட்கள் மற்றும் நடமாடும் ‘சிக்னல் டவர்’ ஆகியவை கொண்டுவரப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அலுவலகம், பயணிகள் அறை போன்றவை கட்டுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமிபூஜை போடப்பட்டது.

அதைத்தொடர்ந்து கல்குவாரிகளில் இருந்து கட்டிட பணிகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதற்கு 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

Next Story