நாமக்கல்லில் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
வன நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களில் அனுபவம் உள்ள மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல்,
தமிழகத்தில் ஆதிவாசி மக்களின் நிலங்களை ஆதிவாசி அல்லாதோர் வாங்குவதையும், விற்பதையும் மற்ற மாநிலங்களைபோல் தடை செய்ய வேண்டும். வனநிலங்கள் மற்றும் தரிசு நிலங்களில் அனுபவம் உள்ள மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு பங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் தங்கராஜ், மாநில செயலாளர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் ஆதிவாசி மக்கள் பல ஊராட்சிகள், ஒன்றியங்களில் வாழுமிடங்களை பிரித்து வைத்திருப்பதை அரசு எல்லை மறுவரையறை செய்து, ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளை 5-வது அட்டவணை பகுதியாக உடனடியாக அறிவிக்க வேண்டும். வனச்சட்டத்தை முறையாக அமல்படுத்த தொடங்கும் காலம் வரையிலும், எந்த காரணத்தின் பெயரிலும் வனப்பகுதியில் குடியிருந்து வரும் ஆதிவாசி மக்களையும், நிலங்களை பயன்படுத்தும் மக்களையும் வெளியேற்றம் செய்வது முழுமையாக தடுக்கப்பட வேண்டும்.
வனநில உரிமை சட்டத்தின்படி வனங்களை சார்ந்து வாழ்வோருக்கு 10 ஏக்கர் நிலமும், நிலமற்ற தரைபகுதிகளில் வாழும் ஆதிவாசிகளுக்கு 2 ஏக்கர் நிலமும் உடனடியாக அரசு வழங்க வேண்டும். மலைப்பகுதிகளில் உள்ள அங்கன்வாடி, அரசு பள்ளிகள், உண்டு உறைவிட பள்ளிகளுக்கு சரிவர வராமல் ஏமாற்றும் ஆசிரியர்கள், காப்பாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட தலைவர் சின்னசாமி, செயலாளர் ஜெயபால், பொருளாளர் கார்த்திக், செயற்குழு உறுப்பினர் காளி மற்றும் மலைவாழ் மக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story