‘ஆத்தூரில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது’ குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


‘ஆத்தூரில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது’ குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 27 Nov 2018 4:30 AM IST (Updated: 26 Nov 2018 10:44 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி அண்ணாநகர் சலவை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சலவை தொழிற்கூடம் கடந்த 1958-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே எங்களுக்கு தொழிற்கூடத்தை புதுப்பித்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆத்தூர் கிளை மற்றும் ஆத்தூர் பகுதி பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஆத்தூர் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட 13, 14, 15 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. அங்கு பள்ளிவாசல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி, சிறுவர் பூங்கா உள்ளன. இந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி பெந்தெகோஸ்தே சபை விசுவாசிகள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள சபை தலைமை இடத்தில் தலைமை போதகராக இருந்தவர் கனகராஜ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கொலையை மறைக்க உடந்தையாக இருந்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 69 பேர் மிகக்குறைவான ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.205 வழங்கப்பட்டது. தற்போது அதிலும் குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு தினக்கூலியாக மீண்டும் ரூ.205 வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 3 மாதம் அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறார்கள். இதனால் புதிதாக வருபவர்களுக்கு திருட்டு சம்பவம் குறித்து சரிவர விசாரணை நடத்த முடியவில்லை. எனவே தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும். ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் நிரந்தரமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ம.தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், ஓடைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து தனியார் காற்றாலை நிறுவனங்கள் நட்டியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ வெள்ளமடம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து யூனியன் சார்பில் ஆற்றுநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதையடுத்து எங்கள் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நிலத்தடி ஆற்றுநீர் தொட்டியும், மோட்டார் அறையும் அமைக்கப்பட்டது. ஆனால் அது செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அங்கிருந்து எடுக்கும் தண்ணீர் எங்கள் பகுதிக்கு வினியோகம் செய்யப்படுவது இல்லை. எனவே எங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Next Story