நெல்லையில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு


நெல்லையில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Nov 2018 4:30 AM IST (Updated: 26 Nov 2018 11:25 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று இரவு ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை சி.என்.கிராமம் மேலத்தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் இசக்கி பாண்டி (வயது 32), ஆட்டோ டிரைவரான இவர் கிரிக்கெட் ரசிகர் ஆவார். மேலும் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதனால் இவரை கிரிக்கெட் பாண்டி என்றும் நண்பர்கள் அழைத்து வந்தனர்.

இவர் நேற்று இரவு 7 மணியளவில் சி.என்.கிராமம் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் அங்கு வந்தனர். திடீரென அந்த 3 பேரும் இசக்கி பாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர் தப்பி ஓட முயன்றார். அப்போது 3 பேரும் அவரை சுற்றி வளைத்து மீண்டும் சரமாரியாக வெட்டினர். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

போலீசாருடன் சேர்ந்து சக ஆட்டோ டிரைவர்களும், அக்கம்பக்கத்தினரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்த இசக்கி பாண்டியை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்தவுடன் அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அங்கு அவருடைய உடலை பார்த்து மனைவி ஜெயலட்சுமி, மகள்கள் மல்லிகா, தேவி ஆகியோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

தொடர்ந்து ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு உருவானது.

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இசக்கி பாண்டியை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்துக்காக அவரை கொன்றனர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து சி.என்.கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.

Next Story