சின்னமனூரில், போலீசாரை கண்டித்து: நகை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
சின்னமனூரில் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் போலீசாரை கண்டித்து ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நகை கடைகள் மற்றும் நகை பட்டறைகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தேனி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா உள்பட வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து நகை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் திருட்டு நகைகளை வாங்கி வியாபாரம் செய்வதாக நகைக்கடை உரிமையாளர்கள் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நகைக்கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி பொய் வழக்குப்பதிவு செய்வதாக போலீசாரை கண்டித்து தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர்கள் கூறியதாவது:-
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளி ஊர்களில் இருந்து தங்க நகைகளை வாங்கி இங்கே விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் திருட்டு நகைகளை விற்பனை செய்வதாக பிரச்சினை எழுந்தது. எனவே எங்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவின்படி விற்பனைக்கு வரக்கூடிய நகைகளில் சின்னமனூரில் உள்ள கடைகளின் பெயர்கள் பதிக்கப்பட்டிருப்பின் அவற்றை மட்டுமே வாங்கி வந்தோம். இந்தநிலையில் தற்போது மீண்டும் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்தும் வரும் போலீசார் ஏதேனும் ஒரு கடையில் திருட்டு நகைகளை வாங்குவதாக கூறி மிரட்டுகின்றனர்.
திருடனை அழைத்து வந்து இவ்வளவு நகைகளை கொடுத்ததாக பொய்யாக கூற வைத்து எங்களை அச்சுறுத்தி நகைக்கான பணத்தையோ அல்லது நகையாகவோ வாங்கி செல்கிறார்கள். அது மட்டுமல்லாமல், விசாரணை என்ற பெயரில் 3, 4 நாட்கள் அலைக்கழித்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். மேலும், வெளி மாநிலத்திற்கு விசாரணைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்கள். செய்யாத குற்றத்திற்காக நாங்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? இதனால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை போலீசார் கெடுக்கிறார்கள். போலீசாரின் இந்த போக்கு மாற்றப்பட வேண்டும். மிரட்டும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் சின்னமனூர் தங்கம், வெள்ளி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோரிடம் கோரிக்கை தொடர்பாக புகார் மனு அளிக்கப் பட்டது.
Related Tags :
Next Story