பச்சிளம் குழந்தையை விற்க முயற்சி: தாய் உள்பட 3 பெண்கள் கைது


பச்சிளம் குழந்தையை விற்க முயற்சி: தாய் உள்பட 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 26 Nov 2018 3:30 AM IST (Updated: 26 Nov 2018 11:29 PM IST)
t-max-icont-min-icon

பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

விக்கிரவாண்டியை அடுத்த ஈச்சங்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி (வயது 25). இவருக்கு சித்ரா (6), அவந்திகா (3½) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த மாதம் இந்திராணிக்கு மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தையை விற்க முடிவு செய்த இந்திராணி, இதுபற்றி விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (30) என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து புதுச்சேரி மாநிலம் மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த ஜோதி (26) என்பவருக்கு ரூ.20 ஆயிரத்திற்கு குழந்தையை விற்பனை செய்ய லட்சுமி மூலமாக பேரம் பேசப்பட்டது. இதற்காக ஆயிரம் ரூபாய் முன்பணமாகவும் இந்திராணிக்கு ஜோதி வழங்கினார்.

பின்னர் குழந்தையை விற்பனை செய்ய விழுப்புரம் வந்தபோது இந்திராணி, கூடுதலாக ரூ.10 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளார். இதற்கு ஜோதி மறுப்பு தெரிவிக்கவே அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று இந்திராணி, ஜோதி, லட்சுமி ஆகிய 3 பேரையும் பிடித்து விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் இந்திராணி, குழந்தையை பணம் கொடுத்து வாங்க வந்த ஜோதி, இடைத்தரகராக செயல்பட்ட லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். பச்சிளம் குழந்தையாக இருப்பதால் அதன் தாய் இந்திராணியை மட்டும் போலீசார், பிணையில் விடுவித்தனர். ஜோதி, லட்சுமி ஆகியோரை சிறையில் அடைத்தனர்.

Next Story