கூடுவாஞ்சேரியில் தி.மு.க. பிரமுகர் கொலையில் அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு 200 ரூபாய் தகராறில் உடன் இருந்தவரே கொன்றது அம்பலம்


கூடுவாஞ்சேரியில் தி.மு.க. பிரமுகர் கொலையில் அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு 200 ரூபாய் தகராறில் உடன் இருந்தவரே கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 27 Nov 2018 4:15 AM IST (Updated: 27 Nov 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரியில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன்-தம்பியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 200 ரூபாய் கேட்ட தகராறில் பல வருடங்களாக நண்பர் போல் உடன் இருந்தவரே அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது 46). இவர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க முன்னாள் கவுன்சிலராகவும், 3-வது வார்டு தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

இவர், தி.மு.க.வில் சேருவதற்கு முன்பு ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சின் சார்பில் போட்டியிட்டு 3-வது வார்டு பேரூராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றார். இவருக்கு கவுரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மோகன், தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது மச்சான் தனசேகருடன் பெருமாட்டுநல்லூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நந்திவரம் பிரதான சாலையில் செங்கேனி அம்மன் கோவில் அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மோகனை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.

இதை தடுக்க முயன்ற அவரது மச்சான் தனசேகரனையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவரது கையில் காயம் அடைந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. கையில் காயத்துடன் தனசேகரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்த தனசேகரனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையான மோகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மோகன் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து ஒரு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட மோகனின் உறவுக்கார பெண்ணுக்கும், அதே பகுதியை சோந்த ஆனந்தன் என்பவரின் உறவுக்கார வாலிபருக்கும் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழா நல்லபடியாக நடைபெற்ற காரணத்தால் தனது நண்பர்களுக்கு ஆனந்தன் மது விருந்து வைக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு நந்திவரம் சுடுகாடு அருகே மது விருந்து தடபுடலாக நடைபெற்றது.

இந்த மது விருந்தில் கொலையான மோகன் மற்றும் ஆனந்தனின் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மோகனுடன் பல வருடங்களாக நண்பராக பழகி வந்த நந்திவரம் பகுதியை சேர்ந்த குட்டா வினோத்(30) அங்கு வந்து, ஆனந்தனிடம் ரூ.200 தரும்படி கேட்டு தகராறு செய்தார். இதனை மோகன் தட்டிக் கேட்டு குட்டா வினோத்தின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த குட்டா வினோத், மோகனை பார்த்து “10 பேர் முன்னிலையில் என்னை கன்னத்தில் அறைந்துவிட்டாய். இன்று(அதாவது நேற்று முன்தினம்) இரவுக்குள் உன்னை கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இதன் பின்னர் மது விருந்து தொடர்ந்து நடந்தது. மது விருந்து முடிந்த பிறகு நேற்றுமுன்தினம் இரவு மோகன் தனது மச்சான் தனசேகர் உடன் மோட்டார் சைக்கிளில் பெருமாட்டுநல்லூர் நோக்கி செல்லும்போதுதான் குட்டா வினோத், அவரது அண்ணன் சதீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து மோகனை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். மோகனை வெட்டும் போது தடுக்க முயன்ற அவரது மச்சான் தனசேகரனின் கையை வெட்டிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள அண்ணன்-தம்பியான குட்டா வினோத், சதீஸ் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மிக விரைவில் கொலையாளிகளை தனிப்படை போலீசார் பிடித்து விடுவார்கள். இவ்வாறு உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Next Story