மயிலம் அருகே: ஆம்னி பஸ்சில் 3½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த 4 பேர் கைது - பரபரப்பு தகவல்


மயிலம் அருகே: ஆம்னி பஸ்சில் 3½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த 4 பேர் கைது - பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 26 Nov 2018 10:00 PM GMT (Updated: 26 Nov 2018 6:51 PM GMT)

மயிலம் அருகே ஆம்னி பஸ்சில் 3½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் நேற்று மயிலம் அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோர ஓட்டலுக்கு ஒரு காரில் வந்திறங்கிய 4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார், அந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த ஜாபர் மகன் ஹமீத்அப்பாஸ்(வயது 33), தபீர் மகன் களந்தர்(38), அபுபக்கர் மகன் காஜா(38), காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்த கோவிந்தராஜூலு மகன் ஹரிகிருஷ்ணன்(36) ஆகியோர் என்பதும், அவர்கள் 4 பேரும் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது.

மேலும் அவர்கள் கடந்த மாதம் 28-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் மயிலம் அருகே உள்ள சாலையோர ஓட்டலில் நிறுத்தப்பட்டபோது, அதில் பயணம் செய்த காயல்பட்டினத்தை சேர்ந்த அகமது சுலைமான்(33) என்ற நகை வியாபாரிக்கு சொந்தமான 3½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஹரிகிருஷ்ணன் உள்பட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த மாதம் 28-ந்தேதி சென்னையில் இருந்து காயல்பட்டினத்துக்கு ஒருவர் ஆம்னி பஸ்சில் ஹவாலா பணத்தை கடத்தி செல்வதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பணத்தை நாங்கள் கொள்ளையடிக்க முடிவு செய்து, ஹரிகிருஷ்ணனை அந்த ஆம்னி பஸ்சில் அனுப்பி வைத்து விட்டு, நாங்கள் 3 பேரும் ஒரு காரில் ஆம்னி பஸ்சை பின்தொடர்ந்தோம். அந்த பஸ் மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு ஓட்டலில் நிறுத்தப்பட்டது. அப்போது பஸ்சில் இருந்தவர்கள் சாப்பிட சென்றனர். அந்த சமயத்தில் ஹரிகிருஷ்ணன் ஒரு பயணி அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பையில் இருந்த பொருட்களை ஹவாலா பணம் என நினைத்து, அதனை எடுத்துக் கொண்டு நாங்கள் வந்த காரில் ஏறிக் கொண்டார். சிறிதுதூரம் சென்று பார்த்தபோது, பையில் 3½ கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது எங்களுக்கு தெரியவந்தது. இந்த நிலையில் நாங்கள் சென்னையில் இருந்து ராமநாதபுரம் சென்றபோது, போலீசாரிடம் சிக்கி கொண்டோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 3½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் அதை கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். ஹவாலா பணம் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் ஆகியோர் மயிலம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து, கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வெள்ளி பொருட்களை பார்வையிட்டதோடு, கொள்ளையர்களை கைது செய்த மயிலம் போலீசாரை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரும் எங்கெல்லாம் ஹவாலா பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள் எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story