கஜா புயலால் தோட்டம் நாசம்: முந்திரி மரத்தில் தலையால் முட்டி, முட்டி உயிரை விட்ட விவசாயி - மேலும் 2 பேர் பலியான பரிதாபம்


கஜா புயலால் தோட்டம் நாசம்: முந்திரி மரத்தில் தலையால் முட்டி, முட்டி உயிரை விட்ட விவசாயி - மேலும் 2 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 27 Nov 2018 4:00 AM IST (Updated: 27 Nov 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலுக்கு தோட்டம் நாசமானதால் மனம் உடைந்த விவசாயி அங்குள்ள முந்திரி மரத்தில் தலையால் முட்டி, முட்டி உயிரை விட்டார். மேலும் 2 விவசாயிகளும் பரிதாபமாக இறந்தனர்.

கீரமங்கலம்,

கஜா புயல் தாக்கியதில் சோலைவனமாக இருந்த நெடுவாசலும் தப்பவில்லை. போராட்டம் நடந்த நாடியம்மன் கோவில் திடலில் நின்ற அத்தனை ஆலமரங்களும் ஒடிந்து சாய்ந்தது. அதே போல சாலை எங்கும் நிழல் கொடுத்த மரங்களையும் காணவில்லை. சுற்றியுள்ள விவசாய நிலங்களில் தென்னை, வாழை, மா, பலா, சவுக்கு என அத்தனை மரங்களும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்துக்கு கைகொடுத்து வந்த அத்தனை வளங்களும் போய் விட்டனவே என வாழ்க்கையின் விளிம்புக்கு வந்த விவசாயிகள் தங்கள் இன்னுயிரை தந்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலைச் சேர்ந்த வேலாயுதம் மகன் திருச்செல்வம் (வயது 45). விவசாயி. திருச்செல்வத்திற்கு சுமார் 25 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த தென்னை, பலா, சவுக்கு, பாக்கு மரங்கள் மற்றும் பல மரங்களும் கஜா புயலால் அடியோடு ஒடிந்து நாசமானது.

தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை போய் பார்த்த திருச்செல்வம் சோகத்தில் காணப்பட்டார். இந்த நிலையில் அத்தனை மரங்களும் போய் விட்டதை நினைத்து மனமுடைந்த திருச்செல்வம் நேற்று முன்தினம் இரவு பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நெடுவாசலில் திருச்செல்வம் வீட்டில் திரண்டனர். மேலும் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் திருச்செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் கூறியதாவது:- திருச்செல்வத்துக்கு சொந்தமான அனைத்து மரங்களும், பயிர்களும் நாசமான நிலையில் தமிழக அரசு அறிவித்த நிவாரணம் விவசாயிகளின் கடனை கட்ட கூட பத்தாத நிலையில் உள்ளதால் திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார். இதற்கிடையே வடகாடு போலீசார் திருச்செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட திருச்செல்வம் உடலுக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினர்.

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா மங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (60). விவசாயி. இவருக்கு சொந்தமான முந்திரி தோட்டமும் கஜா புயலால் நாசமானது. புயலால் பாதிக்கப்பட்ட தனக்கு சொந்தமான தோட்டத்துக்கு நேற்று முன்தினம் தங்கராசு சென்றார். அங்கு பாதிப்படைந்த முந்திரி மரங்களை பார்த்து அவர் கண்ணீர் விட்டு கதறினார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அருகில் உள்ள இடங்களில் அவர்களது உறவினர்கள் தேடினர். இந்நிலையில் நேற்று அதிகாலை முந்திரி காட்டில் காயத்துடன் தங்கராசு இறந்து கிடந்தது தெரிய வந்தது. முந்திரி தோட்டம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள ஒரு முந்திரி முரத்தில் தலையால் முட்டி, முட்டி அழுததில் தங்கராசு இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கராசு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

இதே போன்று கறம்பக்குடியை சேர்ந்தவர் முனியாண்டி (65) விவசாயி. இவருக்கு சொந்தமான தோப்பில் இருந்த தென்னை மரங்கள் கஜா புயலால் முற்றிலும் அழிந்தது. இதனால் மன மனமுடைந்த நிலையில் வீட்டில் முனியாண்டி இருந்த வந்தார். இந்நிலையில் முனியாண்டி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார். 

Next Story