20 சதவீத போனஸ் வழங்காவிட்டால் தோட்ட தொழிலாளர்களை திரட்டி போராட்டம் - தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு
20 சதவீத போனஸ் வழங்காவிட்டால் தோட்ட தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ள நான்சச்சில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி போனசாக தொழிலாளர் தரப்பில் 20 சதவீத தொகை வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் கூறப்பட்டது. ஆனால் நிர்வாக தரப்பில் 8.33 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்க முடியும் என்று கூறினர். இதனை தொடர்ந்து குன்னூர் தொழிலாளர் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எஸ்டேட் நிர்வாகம் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் ஜெயராமன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுசெயலாளர் போஜராஜ் ஆகியோர் கூறியதாவது:- தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து இருந்தோம். ஆனால் நிர்வாக தரப்பில் 8.33 சதவீதம் போனஸ் வழங்குவதாக கூறினர். இந்த தேயிலை தோட்டத்திற்கு அருகில் உள்ள 2 தேயிலை தோட்டங்களிலும், மற்ற சில தேயிலை தோட்டங்களிலும் 20 சதவீத போனஸ் வழங்கி உள்ளனர்.
ஆனால் இந்த எஸ்டேட் நிர்வாகம் 20 சதவீத போனஸ் தர மறுக்கிறது. ஆண்டு முழுவதும் வனவிலங்குகள், அட்டை பூச்சி ஆகியவற்றிற்கு மத்தியில் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 8.33 சதவீத போனஸ் தருவதாக கூறுவது நியாயமற்றது ஆகும். இது குறித்து தொழிலாளர் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடிவு ஏற்படவில்லை.
இன்று (நேற்று) பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தது. இதில் கலந்து கொள்ள ஏராளமான தொழிலாளர்கள் குன்னூர் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு காத்திருந்தனர். ஆனால் எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. 20 சதவீத போனஸ் வழங்காவிட்டால் தோட்ட தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story