தலைஞாயிறு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் பார்வையிட்டார்


தலைஞாயிறு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 27 Nov 2018 4:15 AM IST (Updated: 27 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் அவரிக்காடு பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள், மாமரங்கள், புளிய மரங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்ட போது, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக நிவாரணமும், புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீட்டு தொகையும் வேண்டி கோரிக்கை வைத்தனர். பொது மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர், புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் மற்றும் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நாகக்குடையான் ஊராட்சி பொன்னாங்கன்னி கிராமத்தில் கஜா புயலால் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களை பார்வையிட்டார்.

பின்னர் கத்திரிப்புலம் ஊராட்சி கோவில்குத்தகை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் சந்தித்தார். அப்போது பொதுமக்கள், தங்களது கிராமத்தில் உள்ள மாமரங்கள், முந்திரி மரங்கள், தோட்ட பயிர்கள் உள்ளிட்டவைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன என தெரிவித்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வகையில் தமிழக அரசு அறிவித்தபடி அனைத்து நிவாரணங்களும் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Next Story