அரசு நிவாரணம் ரூ.1,100 என அறிவிப்பு: புயலுக்கு சாய்ந்த தென்னை மரத்தை வெட்டி அகற்றிட ரூ.2 ஆயிரம் கூலி - கதறி கண்ணீர் விட்ட விவசாயி
அரசு நிவாரணமாக அறிவித்ததோ ரூ.1,100, ஆனால், புயலுக்கு சாய்ந்த தென்னை மரம் ஒன்றை வெட்டி அகற்றிட தொழிலாளர்கள் கேட்கும் கூலியோ ரூ.2 ஆயிரம் என விவசாயி கண்ணீர் விட்டு கதறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் தாக்கத்தில் இருந்து விவசாயிகள் மீண்டு வருவது என்பது இயலாத காரியம். வங்கி, நிதி நிறுவனங்களில் விவசாயத்துக்கு கடன் பெற்று வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த அனைத்தும் புயலுக்கு சேதமாகி விட்டன.
மேலும் 6 லட்சத்துக்கும் மேலான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து பெரும் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து, பராமரித்து வந்த தென்னந்தோப்பில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து உயிரற்று கிடப்பது கண்டு விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அரசு சார்பில் சாய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு புயல் நிவாரண நிதியாக ரூ.1,100 அறிவிக்கப்பட்டது. அந்த நிவாரண அறிவிப்பை கண்டு ஜீரணிக்க முடியாத நிலையில் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகிறார்கள்.
இதுகுறித்து வெள்ளாக்குளம் பகுதியை சேர்ந்த தென்னை விவசாயி அந்தோணி கூறியதாவது:-
எனது தோட்டத்தில் 2 ஏக்கர் நிலத்தில் கிணற்று நீர் பாசனம் மூலமாக கடந்த 20 ஆண்டுகளாக தென்னை மரங்கள் வளர்த்து பராமரித்து வந்தேன். 300-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேலாக வருமானம் கிடைத்து வந்தது. சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு 150-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால், எனது வருமானம் போய்விட்டது.சமீபத்தில் அரசு தென்னை மரம் ஒன்றுக்கு புயல் நிவாரணமாக ரூ.1,100 அறிவித்தது. தற்போது சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திட வேண்டும். ஆனால், அதற்கு ஒரு மரத்துக்கு கூலியாக மட்டும் ரூ.2 ஆயிரம் வரை கேட்கிறார்கள். எனவே, மரத்தை வெட்டி அகற்றவா? அல்லது விவசாயம் ஏதும் செய்யாமல் அப்படியே போட்டுவிடவா? என்ற மனநிலைக்கு வந்து விட்டேன். எனவே, அரசு நிவாரணத்தொகையை கூடுதலாக வழங்குவதுடன் தென்னங்கன்றுகளும் இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறிய அவர், கண்ணீர் விட்டு கதறிய காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
Related Tags :
Next Story