பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கக்கோரி புயல் தாக்கிய 12 மாவட்டங்களில் 4-ந் தேதி காத்திருப்பு போராட்டம் விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் பேட்டி
பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரி புயல் தாக்கிய 12 மாவட்டங்களில் 4-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.
தஞ்சாவூர்,
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் லாசர் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட புயல் பாதித்த 12 மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக மத்தியஅரசு உடனே அறிவிக்க வேண்டும். வீடுகளை இழந்த அனைவருக்கும் இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்ற ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
பலியான கால்நடைகளான மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், ஆடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், பறவைகளுக்கு ரூ.500-ம் வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்ட நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். புயல் தாக்கத்தால் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, போர்வை, ஆடைகள் முறையாக கிடைக்கவில்லை.
கிராமப்புறங்களுக்கு இன்னும் நிவாரண பொருட்கள் சென்று சேரவில்லை. நிவாரண பொருட்கள் வழங்குவதில் கூட தீண்டாமை பார்க்கப்படுகிறது. ஆதிதிராவிடர் இன மக்களுக்கு முகாம்களில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதில்லை. தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தான் ஆளும்கட்சியினரும், அதிகாரிகளும் நிவாரண பொருட்களை வழங்குகின்றனர். தென்னை விவசாயிகளை போல விவசாய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம், குடிநீர், மருத்துவவசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சீரமைப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து சீரமைப்பு பணிகளுக்கு தொழிலாளர்களை அனுப்ப பல மாநிலங்கள் தயாராக உள்ளன. அவற்றை தமிழகஅரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், பொருளாளர் சங்கர், செயலாளர் பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர் அபிமன்னன் ஆகியோர் உடன் இருந் தனர்.
Related Tags :
Next Story