ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அரசாணை நகலை எரித்து போராட்டம்


ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அரசாணை நகலை எரித்து போராட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2018 4:30 AM IST (Updated: 27 Nov 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் 8–வது ஊதியக்குழுவின் அரசாணை நகலை எரிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. அந்த வகையில் கூட்டணியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி நேற்று காலையில் அங்கு கூடிய சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.35 ஆயிரத்து 400 என்று நிர்ணயித்திருக்க, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.20 ஆயிரத்து 600–ஐ வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 8–வது ஊதியக்குழிவின் முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கனகராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பிரபு செபஸ்டியன், மாநில துணைத்தலைவர் ஜான்கிறிஸ்துராஜ், அங்கன்வாடி மாநில பொருளாளர் பாக்கியம், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஞானதம்பி, மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அரசாணை நகலை எடுத்து தீ வைத்து கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து எரிக்கப்பட்ட அரசாணை நகலை பிடுங்கி அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story