அரசாணை நகலை எரிக்க முயன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 120 பேர் கைது
ஈரோட்டில் அரசாணை நகலை எரிக்க முயன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க மறுக்கும் அரசாணையின் நகலை எரிக்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு சம்பத்நகரில் நேற்று காலை போராட்டம் நடந்தது.
இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பலர் சம்பத்நகரில் உள்ள கொங்கு கலையரங்கம் முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தில் கூட்டணியின் நிர்வாகிகள் அரசாணை நகல்களை ஆசிரியர்களுக்கு கொடுத்தனர். மேலும், தீப்பெட்டியும் அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர்கள் சிலர் அரசாணையின் நகல்களை தீயிட்டு கொளுத்தினார்கள். போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் இருந்த நகல்களை பறிமுதல் செய்து தீயை அணைத்தனர். அதைத்தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களிடம் இருந்தும் அரசாணைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதில் 20 பெண்கள் உள்பட மொத்தம் 120 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.