ஒட்டன்சத்திரத்தில்: நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஒட்டன்சத்திரத்தில் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி மற்றும் செல்போனை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பிரவீன்குமார் (வயது 32). இவர், ஒட்டன்சத்திரம் சொசைட்டி காலனியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தங்கி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், கடந்த 24-ந்தேதி மாலை பிரவீன்குமார் வீட்டை பூட்டிவிட்டு தாராபுரத்துக்கு சென்றுவிட்டார். பின்னர், நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது, சுற்றுச்சுவரின் கேட் திறந்து கிடந்தது. மேலும், வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த மடிக்கணினி மற்றும் செல்போன் ஆகியவை திருடு போயிருந்தன.
உடனே, அவர் ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து, மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மடிக்கணினி மற்றும் செல்போனை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story