கொடைக்கானலில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார்: இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முடிவு - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


கொடைக்கானலில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார்: இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முடிவு - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2018 9:30 PM GMT (Updated: 26 Nov 2018 9:59 PM GMT)

20 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று கொடைக்கானலில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

கொடைக்கானல், 

‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் ஏராளமான மரங்கள் சாய்ந்ததுடன், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கல்லறை மேடு, புதுக்காடு, பேத்துப்பாறை உள்ளிட்ட இடங்களை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கஜா’ புயல் பாதித்த அடுத்த நாளே பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தே.மு.தி.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 2-ம் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், வேடசந்தூர், நத்தம் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்கியுள்ளோம். நாளை அதாவது (இன்று) புதுக்கோட்டையிலும், 28-ந்தேதி தஞ்சை, வேதாரண்யம் பகுதியிலும், 29-ந்தேதி திருவாரூர் மாவட்டத்திலும் புயல் சேதங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உள்ளோம்.

கொடைக்கானல் பகுதியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதற்கு காரணம் தைல மரங்கள் தான். இவை அடிக்கடி விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஆபத்தினை விளைவிக்கக்கூடிய அனைத்து மரங்களையும் அகற்ற வேண்டும். கொடைக்கானலில் பல ஆண்டுகளாக எந்த விதமான அபிவிருத்தி திட்டங்களும் நடைபெறவில்லை.

புயல் பாதிப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வெறும் வாயால் மட்டுமே முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அத்துடன் மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி கேட்டுள்ளனர். அது எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை. முதல்-அமைச்சரும், கட்சி நிர்வாகிகளும் மக்களை சந்திக்க பயப்படுகின்றனர்.

மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 10 நாட்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் மறியல் செய்கின்றனர். பயந்து ஓடுபவர்கள் ஆட்சிக்கு தேவையில்லை. அப்படி ஓடிக்கொண்டிருந்தால் மக்கள் உங்களை ஓட வைக்கும் நாள் விரைவில் வரும். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேளுங்கள்.

20 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். மக்கள் தெளிவாக உள்ளனர். மாற்றத்துக்காக அவர்கள் தயாராகி வருகின்றனர். விஜயகாந்த் சிங்க கர்ஜனையுடன் மீண்டும் வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டபோது, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, துணை செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர் மோகன், பொருளாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் கணேசன், துணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து வேடசந்தூர் அருகே உள்ள தோப்புப்பட்டியில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல் கூறினார்.

Next Story