வத்தலக்குண்டு அருகே பரபரப்பு: மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
வத்தலக்குண்டு அருகே மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு அருகே கரட்டுப்பட்டி, உச்சப்பட்டி உள்பட 10 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்துக்கும் முக்கிய நீராதாரமாக மஞ்சளாறு அணை விளங்குகிறது. மஞ்சளாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் இந்த பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.
கடந்த மாதம் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் உச்சப்பட்டி, கரட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இதுவரை வந்து சேரவில்லை. அதன்பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
‘கஜா’ புயலினால் அணை முழுக் கொள்ளளவான 57 அடியை எட்டியது. ஆனால் அணையில் இருந்து முறையாக தண்ணீர் திறக்கப்படாததால் நாற்று பாவிய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாற்று கருகிவிடும் நிலை உருவாகி உள்ளது. எனவே மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமரன் தலைமையில் போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து பேசுவதாக உறுதி கூறினர். ஆனால் நீண்ட நேரமாகியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் உருண்டு, புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 10 நாட்களுக்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்னும் 10 நாட்களுக்குள் தண்ணீர் திறக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story