நாகர்கோவிலில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசாணை நகல் எரிப்பு 56 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதுதொடர்பாக 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்,
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரியும், இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தைப் பறித்த அரசாணை எண் 234 மற்றும் 303 ஆகியவற்றின் நகல்களை தீயிட்டு கொளுத்தும் போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தது.
அதேபோல் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடந்தது. இதற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மரியமிக்கேல் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஜிம்சன், ஓய்வுபெற்ற பள்ளி– கல்லூரி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த பாலசுந்தரராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பகவதியப்பபிள்ளை மற்றும் ஆதித்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த அரசாணை நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக சங்க மாவட்ட தலைவர் மரியமிக்கேல் உள்பட 44 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 56 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.