நாகர்கோவிலில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை; உதவி கலெக்டர் விசாரணை
நாகர்கோவிலில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் குறுந்தெருவை சேர்ந்தவர் நல்லசிவம்பிள்ளை. இவருடைய மனைவி ஜெயகுமாரி. இவர்களுடைய மகள் சீதா (வயது 28). இவருக்கும், சிறமடம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெங்கடேஷ் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
சீதா– வெங்கடேஷ் தம்பதியருக்கு அனிகா (5) என்ற மகளும், சாய்ராகுல் (2½) என்ற மகனும் உள்ளனர். வெங்கடேஷ் திருப்பூரில் பணியாற்றி வருவதால் சீதா தனது பிள்ளைகளுடன் குறுந்தெரு பகுதியில் தனது தாயார் வீட்டுக்கு அருகிலேயே தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி வெங்கடேஷ் 10 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை சீதாவின் வீட்டில் இருந்து குழந்தைகள் கதறி அழும் சத்தம் நீண்ட நேரம் கேட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அருகில் வசிக்கும் சீதாவின் தாயாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜெயகுமாரி பதறியடித்து ஓடி வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு வீட்டின் குளியலறை உள்ள உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்ட நிலையில் சீதா பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகுமாரி சத்தம் போட்டு கதறி அழுதார். அவருடன் சேர்ந்து சீதாவின் குழந்தைகளும் கதறி அழுதன. இது காண்போர் அனைவரையும் கண்கலங்கச் செய்வதாக இருந்தது.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜெயகுமாரியையும், சீதாவின் குழந்தைகளையும் ஆறுதல் கூறி சமானப்படுத்தினர். பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சீதாவுக்கும், வெங்கடேசுக்கும் அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்படும்என்றும், அதேபோல் நேற்று முன்தினம் இரவு வெங்டேஷ் சீதாவுடன் செல்போனில் பேசியபோது கடன் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனால் மனம் உடைந்த சீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது.
திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் சீதா தற்கொலை செய்து கொண்டாரா?என்பது குறித்து நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.