நாகர்கோவில் அருகே வினோதம் பொதுத்தேர்தல் போன்று நடந்த ஊர் நிர்வாகிகள் தேர்தல்


நாகர்கோவில் அருகே வினோதம் பொதுத்தேர்தல் போன்று நடந்த ஊர் நிர்வாகிகள் தேர்தல்
x
தினத்தந்தி 26 Nov 2018 10:45 PM GMT (Updated: 26 Nov 2018 10:21 PM GMT)

நாகர்கோவில் அருகே பொதுத்தேர்தல் போன்று ஊர் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் போலீஸ் பாதுகாப்புடன் கிராம மக்கள் வாக்களித்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே மணிக்கட்டி பொட்டல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசு உயர் பதவி வகிப்பவர்கள், எழுத்தாளர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தில் ஊர் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊர் மக்களால் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். சமீபத்தில் பதவி வகித்த ஊர் நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்தது.

இதையடுத்து ஊர் நிர்வாகிகள் பதவிகளை பெற போட்டி நிலவியது. யார், யாரை நிர்வாகிகளாக தேர்வு செய்வது என்று கிராம மக்கள் குழப்பம் அடைந்தனர். இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது சட்டசபை, நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் பொதுத்தேர்தல் போன்று ஓட்டுப்போட்டு தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசாரிடம் முறையாக அனுமதி பெற்றனர். அவர்களும் வினோதமாக நடந்த இந்த தேர்தலுக்கு பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்தனர்.

அதன்படி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதாவது வாக்குச்சீட்டு, வாக்காளர் பட்டியல் இறுதி செய்வது, வாக்குப்பதிவு நடைபெறும் இடம் ஆகியவை தயாரானது. கிராம மக்கள் எடுத்த முடிவின்படி மணிக்கட்டி பொட்டல் முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு அங்கு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டன. வேட்பாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகளும் தயார் நிலையில் இருந்தது.

மேலும் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட வருபவர்களை அடையாளம் காண வேட்பாளர்களின் ஏஜெண்டுகளும் அமர்ந்திருந்தனர். தேர்தல் அதிகாரியாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான பொன்னீலன், முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ் ஆகியோர் செயல்பட்டனர். கிராம மக்கள் வரிசையாக வந்து தங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்து பெட்டியில் போட்டனர். ஒவ்வொரு வாக்காளரும் தலைவர், பொருளாளர், 2 இணை செயலாளர்கள் பதவிகளுக்கு 4 வாக்குகளை பதிவு செய்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிந்தது.

இதுதவிர வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் தபால் மூலமும், ஆன்லைன் மூலமும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி 108 வாக்குகள் தபால் வாக்குகளாக பதிவாகி இருந்தது. மொத்தம் உள்ள 414 வாக்குகளில் 409 வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலையில் வாக்குச்சீட்டுகள் பிரித்து எண்ணப்பட்டன.

இதில் சீனிவாசன் என்பவர் தலைவராக வெற்றி பெற்றார். பொருளாளராக சேகர், துணை செயலாளர்களாக சந்திரமோகன், நீலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அறிவிப்பு வெளியானதும் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வினோதமாக நடந்த இந்த தேர்தலுக்கு சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


Next Story