அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு பணி ஆணை, கலெக்டர் வழங்கினார்
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், வீடு கட்டுவது குறித்து கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை, இலவச தையல் எந்திரம், ஆக்கிரமிப்பு அகற்றவது போன்ற கோரிக்கைகள், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு உள்பட 248 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒருமாத காலத்திற்குள் தீர்வு வழங்க வேண்டு என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.21லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் ராமபிரதீபன், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே உள்ள தீயனூர் உள்ளிட்ட 5 கிராமப் பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:– மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட தீயனூர், மங்கையரேந்தல், சேதுராயனேந்தல், அரிமண்டபம், ராஜாக்கள் குடியிருப்பு ஆகிய 5 கிராமங்களிலும் சுமார் 800–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்லும் வகையில் ஏற்கனவே இருந்த மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரிவு சாலை இருந்தது.
தற்போது, நான்கு வழிச்சாலை பணிக்காக தீயனூர் விலக்குப் பிரிவில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தீயனூர் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு செல்லும் வகையில் பிரிவு சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சுமார் 5 கி.மீ. தொலைவு சுற்றி வர வேண்டியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மதுரை–ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் தீயனூர் விலக்கு பகுதியில் மேற்கண்ட 5 கிராமப் பகுதிக்கு செல்லும் வகையில் பிரிவு சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.