திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7–ந் தேதிக்குள் இடைத்தேர்தல்; மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்


திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7–ந் தேதிக்குள் இடைத்தேர்தல்; மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2018 4:33 AM IST (Updated: 27 Nov 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

பிப்ரவரி 7–ந் தேதிக்குள் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

மதுரை,

திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்–அமைச்சருமான மு.கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால், அந்த 2 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன. அந்த தொகுதிகளுக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் பருவமழை காலம் என்ற காரணத்தால் இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க உத்தரவிடக் கோரி, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தேர்தல் விதிகளின்படி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த நேரத்தில், பருவமழை காரணமாக இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இல்லை.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனதற்கு எதிராக, அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. இறந்துவிட்டார். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினால், தேர்தல் முடிவுகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தேர்தல் விதிகளின்படி உடனடியாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எப்போது தேர்தல் நடத்தப்படும்? என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2016–ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளரான டாக்டர் சரவணன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும். ஆனால், திருவாரூர் தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 7–ந் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Next Story