புயல் பாதித்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் முறையீடு


புயல் பாதித்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் முறையீடு
x
தினத்தந்தி 27 Nov 2018 4:45 AM IST (Updated: 27 Nov 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

புயல் பாதித்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் வக்கீல்கள் முறையிட்டனர்.

மதுரை,

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில், ‘கஜா புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் நிவாரணமாகவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்புப்பணியில் முப்படையினரையும், துணை ராணுவ படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதேபோல மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வேண்டும். வேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசன், கஜா புயலுக்கு உரிய நிவாரணத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர், ‘‘புயலால் பாதிக்கப்பட்ட நகர் பகுதிகளில் 92 சதவீதத்திற்கு மேலும், கிராமப்புற பகுதிகளில் 64 சதவீதமும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதற்கிடையே மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள், ‘‘நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும். ஆனால் புயலால் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பாததால், இங்குள்ள மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மத்திய குழுவினர், முழுமையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அங்கு அனைவருக்கும் உடனடியாக மின்சாரம், குடிநீர், நடமாடும் ஏ.டி.எம். போன்ற வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும் என்றனர். மேலும், ‘‘ஆயிரக்கணக்கான வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால், அங்குள்ளவர்களுக்கு தார்ப்பாய்கள், கொசு வலைகள் வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் உரிய இடைக்கால உத்தரவு நாளை (அதாவது இன்று) பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.


Next Story