விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய 30–ந் தேதி கடைசிநாள் வேளாண்மை அதிகாரி தகவல்


விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய 30–ந் தேதி கடைசிநாள் வேளாண்மை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:00 AM IST (Updated: 27 Nov 2018 7:29 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய வருகிற 30–ந் தேதி கடைசிநாளாகும் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய வருகிற 30–ந் தேதி கடைசிநாளாகும் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செந்திவேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறயிருப்பதாவது:–

30–ந் தேதி கடைசிநாள்

வெள்ளம், புயல் மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் இருந்து தற்போது சாகுபடி செய்யப்படும் பிசான நெற்பயிர்களை பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் அதிக அளவில் காப்பீடு செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.

கடன்பெறாத விவசாயிகள் நெல்லை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறாக பிசான பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வருகிற 30–ந் தேதி கடைசிநாளாகும்.

உதவி வேளாண்மை அலுவலரிடம்....

இந்தநிலையில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் அடங்கல், பயிர் விதைப்பு சான்றிதழ் மிகவும் அவசியமாகும். விவசாயிகள் அவர்களிடம் இருந்து மேற்குறிப்பிட்ட சான்றிதழ் பெறுவதில் உள்ள இடப்பாடுகளை கருத்தில் கொண்டு விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலருக்கு பதிலாக சம்பந்தப்பட்ட பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் இருந்து அடங்கலுக்கு மாற்றாக பயிர் விதைப்பு சான்றிதழ் நடப்பு பருவத்தில் உள்ள நெல்பயிருக்கு பெற்று காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்மை இயக்குனரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே பிசான நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பயிர் விதைப்பு சான்றிதழை பெற்று பயிர் காப்பீட்டு தொகையில், விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது ஏக்கருக்கு ரூ.388 காப்பீட்டு கட்டணமாக செலுத்தி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதிவு செய்ய வேண்டுகோள்

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், உதவி வேளாண்மை அலுவலர் வழங்கும் விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story