தந்தையின் உடலை எடுத்து சென்றபோது பரிதாபம்: டேங்கர் லாரி-கார் மோதல்; தாயுடன் என்ஜினீயர் பலி
உளுந்தூர்பேட்டையில் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தாயுடன் என்ஜினீயர் பலியானார்கள். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
உளுந்தூர்பேட்டை,
திருச்சி அருகே உள்ள நாச்சிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 52). இவருடைய மனைவி ராதா (45). இவர்களுக்கு அஜன் (28), அம்ரிஷ் ராமச்சந்திரன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பாபு குடும்பத்துடன் சென்னை சிட்லப்பாக்கத்தில் வசித்தபடி இந்தியன் வங்கி கிளையில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.
திருமணமான அஜன், சென்னை விமான நிலையத்தில் அதிகாரியாக உள்ளார். சாப்ட்வேர் என்ஜினீயரான அம்ரிஷ் ராமச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாபு, நேற்று முன்தினம் திடீரென இறந்தார். அவரின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு பாபுவின் உடல் ஒரு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சென்னையில் இருந்து நாச்சிக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்சில் அஜன் சென்றார். ஆம்புலன்சை பின் தொடர்ந்து ராதா, அம்ரிஷ் ராமச்சந்திரன், பாபுவின் தாய் தங்கம், உறவினர் புவானியா(25) ஆகியோர் ஒரு காரில் சென்றனர். காரை சென்னையை சேர்ந்த கோகுல் என்பவர் ஓட்டினார்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ரவுண்டானா அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நடுரோட்டில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது.
இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ராதா, அவரது மகன் அம்ரிஷ் ராமச்சந்திரன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தங்கம், புவானியா, டிரைவர் கோகுல் ஆகியோரும், பஞ்சரான டேங்கர் லாரியின் டயரை கழற்றிக் கொண்டிருந்த உளுந்தூர்பேட்டை அடுத்த செம்மணங்கூரை சேர்ந்த சந்திரபாபு(31) என்பவரும் படுகாயமடைந்தனர்.
இதை அறிந்த எடைக்கல் போலீசார் விரைந்து வந்து தங்கம், புவானியா, கோகுல் ஆகியோரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரபாபு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பஞ்சரான லாரியை நடுரோட்டில் நிறுத்தி பஞ்சர் ஒட்டுவதற்காக தொழிலாளி சந்திரபாபு, அதன் டயரை கழற்றியபோது விபத்து நடந்துள்ளது போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தில் பலியான அம்ரிஷ் ராமச்சந்திரனுக்கும், சென்னையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. அவர்களுக்கு வருகிற மார்ச் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கார் விபத்தில் பலியான அம்ரிஷ் ராமச்சந்திரனின் உடலை பார்த்து, அந்த இளம்பெண் கதறி அழுதது காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
Related Tags :
Next Story