தாவரவியல் பூங்காவில்: வேரோடு தோண்டி எடுக்கப்பட்ட ‘டிராகன் மரம்’ - கண்ணாடி மாளிகை முன் நடப்பட்டது
ஊட்டி தாவரவியல் பூங்காவில் வேரோடு தோண்டி எடுக்கப்பட்ட ‘டிராகன் மரம்’ கண்ணாடி மாளிகை முன் நடப்பட்டது.
ஊட்டி,
மலை மாவட்டமான நீலகிரியை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில், இங்கிலாந்து நாட்டில் உள்ள காலநிலை ஊட்டியில் நிலவியதால் தங்கள் நாட்டில் இருப்பதை போன்று பாரம்பரிய கட்டிடங்களை வடிவமைத்தனர். மெக்ஐவர் என்ற ஆங்கிலேயர் ஊட்டி சேரிங்கிராசில் பூங்காவை உருவாக்கினார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து மரக்கன்றுகள் கொண்டு வந்து, பூங்காவில் நட்டு வளர்க்கப்பட்டது. வாகன போக்குவரத்து இல்லாத அந்த காலத்தில் கடும் சிரமத்துக்கு இடையே கப்பலில் மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டன.
தற்போது அந்த பூங்கா ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவாக செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பூங்காவில் ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலைப் பூங்கா, நியூ கார்டன், பெரணி இல்லம், பெரிய புல்வெளி மைதானம், கண்ணாடி மாளிகைகள் போன்றவை உள்ளன. இதில் சீசன் காலங்களில் பாத்திகள், நடைபாதை ஓரங்களில் பல்வேறு வகையான மலர் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கும். இது சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும்.
இதற்கிடையே பெரணி இல்லம் அருகே உள்ள கண்ணாடி மாளிகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல் பகுதியில் இருந்து கண்ணாடிகள் திடீரென கீழே விழுந்தன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கண்ணாடி மாளிகை மூடப்பட்டது. அதன் காரணமாக பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.2 கோடியே 31 லட்சம் செலவில் பழுதடைந்த நிலையில் இருந்த கண்ணாடி மாளிகை முழுமையாக சீரமைக்கப் பட்டது.
சீரமைக்கும் பணியின்போது, கண்ணாடி மாளிகை நுழைவுவாயில் பகுதியில் நின்றிருந்த மரம் ஒன்று அகற்றப்பட்டது. தற்போது கண்ணாடி மாளிகையின் நுழைவுவாயில் இருபுறத்திலும் முன்பு இருந்ததைபோன்று மரங்களை நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பூங்காவில் ஒரு பகுதியில் வளர்ந்து இருந்த டிராகன் மரம் நேற்று வேரோடு பிடுங்கப்பட்டது. அந்த மரத்தை பணியாளர்கள் தூக்கி வந்து நுழைவுவாயில் பகுதியில் நட்டு வைத்தனர். பின்னர் மண் கொண்டு மூடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது.
டிராகன் மரம் 10 முதல் 15 ஆண்டுகள் வளர்ந்த பின்னரே அதில் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். அந்த மரம் மெதுவாக வளரும் தன்மை உடையது. அதன் இலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். அது குடை போன்ற தோற்றம் கொண்டது. மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்து இருக்கும். அதன் கிளைகளில் இலைகள் வளரும். டிராகன் மரம் அலங்கார மரம் போன்று காணப்படும். சீரமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை முன்பு டிராகன் மரம் வேருடன் நடப்பட்டு இருப்பது, அதனை மேலும் பொலிவுபடுத்தும் வகையில் அமைந்து உள்ளது. இந்த மரத்தை பூங்கா பணியாளர்கள் தினமும் தண்ணீர் தெளித்து பராமரிக்க உள்ளனர். பின்னர் மரத்தின் வேர் அடியில் பிடித்து வளர தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story