வேலையில்லாத மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலையில்லாத மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி,
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பதிவுதாரர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600, பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.1000 என உதவித்தொகையை பெறுவதற்கு வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. இந்த பயனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி என்ற முன்னுரிமையினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் அரசு அல்லது தனியார் துறையிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி கல்வியினை முழுவதுமாக தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும். இல்லையெனில் பெற்றோர் அல்லது கணவன் அல்லது மனைவி அல்லது பாதுகாவலர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருத்தல் வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். எனவே தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளில் இதுவரை விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பத்தை பெற்று முழு விவரங்களுடன் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்து, அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story