பழனியில் துணிகரம்: அம்மன் கோவில் கோபுர கலசம் திருட்டு - வருடாபிஷேகம் நடக்க இருந்த நாளில் மர்ம நபர்கள் கைவரிசை
பழனியில், அம்மன் கோவில் கோபுர கலசத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். வருடாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் உப கோவில்களாக 40-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இந்தநிலையில் அடிவாரத்தில் உள்ள 4 கிரிவீதிகளிலும் முருகனுக்கு காவல் தெய்வங்களாக வீரதுர்க்கை, அழகுநாச்சியம்மன், வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி ஆகிய 4 கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் தைப்பூச விழாவின்போது, பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதில் கிழக்கு கிரி வீதியில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி நேற்று அந்த கோவிலில் வருடாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்தவுடன் பூசாரி ராஜகாளியப்பன் (வயது 55), கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் கோபுர கலசம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், கோவில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் முருகன் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் மேலாளர் உமா மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து கொண்டனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் கோவிலின் மீது ஏறி கலசத்தை திருடி சென்றது தெரியவந்தது. கோவிலின் உள்பகுதியில் மட்டுமே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகளின் புகைப்படம் எதுவும் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனால் கோவிலின் வெளிப்புறத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். கோபுர கலசம் திருடு போனதால் நேற்று நடைபெற இருந்த வருடாபிஷேக விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய கலசம் வைத்த பின்னர் வருடாபிஷேகம் நடத்தப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலசத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோபுர கலசம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பழனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story