ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை கண்டித்து : ஓசூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை கண்டித்து : ஓசூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:30 AM IST (Updated: 28 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை கண்டித்து ஓசூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நகர தி.மு.க. சார்பில், சட்ட விரோத ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை கண்டித்தும், கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கருணாநிதி வரவேற்றார். நகர துணை செயலாளர்கள் திம்மராஜ், நாகராஜ், நகர பொருளாளர் சென்னீரப்பா, மாவட்ட பிரதிநிதி சரவணன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். இதில் முருகன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். இதில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஞானசேகரன், ஆனந்தய்யா மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், முன்னாள் நகர செயலாளர்கள், கட்சி முன்னோடிகள், வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓசூர் பகுதியில் சட்ட விரோத ஒரு நம்பர் லாட்டரி விற்பனை மற்றும் கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகம், ஓசூர் நகராட்சியை கண்டித்தும் கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, ஓசூர்-தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், தி.மு.க. நிர்வாகிகள் அவசர செயற்குழு கூட்டம், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, முருகன் எம்.எல்.ஏ மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் என்னம்பாக்கம் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வாக்காளர் உரிமை சீட்டு வழங்குவது குறித்தும், கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story