எண்ணெய் லாரி தீ விபத்தில்: முறைகேடு நடந்ததாக வீடியோ ஆதாரம் வெளியானதால் பரபரப்பு - போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
தொப்பூர் அருகே எண்ணெய் லாரி தீ விபத்தில் முறைகேடு நடந்ததாக வீடியோ ஆதாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபுரி,
கோவையில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புடைய தேங்காய் எண்ணெய் ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையை கடக்கும்போது டயரில் தீப்பிடித்தது. இந்த தீ பரவியதால் அந்த டேங்கர் லாரியும் அந்த வழியாக வந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு கியாஸ் டேங்கர் லாரியும் தீயில் சிக்கி கருகின. கியாஸ் லாரி காலியாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ரூ.40 லட்ச மதிப்பிலான தேங்காய் எண்ணெயை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் லாரியில் இருந்து முக்கால் பாகம் எண்ணெயை திருடியதும் சிறிதளவு எண்ணெயுடன் லாரியை திட்டமிட்டு எரித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
லாரியில் திருடி பதுக்கி வைக்கப்பட்ட முக்கால் பங்கு தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய, சேலம் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றபோது லாரி டிரைவர் சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிக்கினார்கள். அவர்களிடம் சேலம் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியபோது தேங்காய் எண்ணெயை முக்கால் பங்கு பதுக்கி வைத்துவிட்டு, கால் பங்கு எண்ணெயுடன் லாரியை எரித்தது தெரியவந்தது.
இந்த முறைகேட்டில் தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முறைகேட்டில் தொடர்புடைய 10 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
வீடியோ ஆதாரம்
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய லாரி உரிமையாளரும், டிரைவருமான பிரபுவின் வாக்குமூலம் தொடர்பான வீடியோ ஆதாரம் நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரவியது. அதில், லாரியில் கொண்டு வரப்பட்ட தேங்காய் எண்ணெயை திருடி விட்டு லாரி எரிந்து சேதமடைந்ததால் காப்பீட்டு பணத்தை பெற திட்டமிட்டோம். இந்த முறைகேட்டிற்கு உதவுவதற்காக தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் லஞ்சமாக வழங்க முடிவெடுத்தோம்.
முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தோம். சம்பவத்தன்று எண்ணெய் லாரி தொப்பூர் மலைப்பகுதியை கடந்தபோது தீ வைப்பு சம்பவத்தை திட்டமிட்டு நடத்தினோம். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த 2 கார்களும், ஒரு கியாஸ் லாரியும் தீவிபத்தில் சிக்கி பெரும் விபத்தாக மாறிவிட்டது. ஆனாலும் நாங்கள் திட்டமிட்டபடியே லாரி தீவிபத்தில் சிக்கியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் உதவினார் என்று கூறப்பட்டுள்ளது.
காப்பீட்டு தொகையை பெறுவதற்காகவும், லாரியில் கொண்டு செல்லப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான தேங்காய் எண்ணெயை திருடுவதற்காகவும், முறைகேடாக நடத்தப்பட்ட இந்த சம்பவத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரே துணை போயிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை பணி இடைநீக்கம் செய்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த மோசடியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சில போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தொப்பூர் அருகே சேலம்-தர்மபுரி நெடுஞ்சாலையில் எண்ணெய் லாரி தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 10 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு லாரி, 2 மோட்டார் சைக்கிள்கள், 12 எண்ணெய் பெட்டிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் முறையான விசாரணையை மேற்கொள்ளாமல் எதிரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக தர்மபுரி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் பரிந்துரையின் பேரில், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உத்தரவின்படி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story