புயல் பாதிப்பு மாவட்டங்களை: பிரதமர் நேரில் பார்க்காதது வருத்தத்திற்குரியது - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி


புயல் பாதிப்பு மாவட்டங்களை: பிரதமர் நேரில் பார்க்காதது வருத்தத்திற்குரியது - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி
x
தினத்தந்தி 28 Nov 2018 3:30 AM IST (Updated: 28 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் பாதிப்பு மாவட்டங்களை பிரதமர் மோடி நேரில் வந்து பார்க்காதது வருத்தத்திற்குரியது என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவேரிப்பட்டணம்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை தூக்கி நிறுத்த தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து இரவு, பகல், மழை, வெயில் என பாராமல் பணிபுரிந்து வருகின்றனர். எதிர்கட்சியினர் இந்த நேரத்தில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் துயரத்தை துடைக்க அரசுக்கு உதவ வேண்டும். அரசியல் செய்வதற்கு இது களம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் நமது மாநில மக்கள். இதை கருத்தில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், கிராமம், கிராமமாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை அளித்து வருகின்றது. தமிழகத்தில் மிக முக்கிய டெல்டா மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் கஜா புயலினால் முழுவதும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தியாவின் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரதமராக இருப்பவர் நேரில் வந்து பார்ப்பது மரபு.

அரசு அதிகாரிகள் தனி குழுவினர் வந்து பார்வையிட்டால், அவர்களது கருத்துகளை மட்டுமே மத்திய அரசுக்கு தெரிவிப்பார்கள். என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை பிரதமர் நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும். அவர் பார்வையிட்ட பின்பு இடைக்கால நிவாரணமாக அளித்துள்ள ரூ. 200 கோடியை உயர்த்தியும் தந்திருப்பார். விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. மரங்கள் வேறோடு சாயந்துள்ளது. இதனை நேரில் பார்ப்பது என்பது வேறு, அறிக்கை மூலம், படங்கள் மூலம் பார்ப்பது என்பது வேறு.

பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக மக்கள். இந்திய துணை கண்டத்தின் மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் பிரதமர் மோடி உடனே வந்திருக்க வேண்டும். அவருக்கு தமிழக பா.ஜனதாவினர் எடுத்து சொல்லியிருக்க வேண்டும். ஆட்சியிலும், கட்சியிலும் இருப்பவர்கள் இதனை சரியாக எடுத்து சொல்லாத காரணத்தினால் அவருக்கு நிலைமை தெரியவில்லை என தெரிகிறது. எந்த நிலை என்றாலும் பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அவர் வராதது வருத்தத்திற்குரியது. அவர், வரமுடியாத சூழ்நிலை மாறி விரைவில் வருவார் என எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story